31 opposition MPs suspended in Parliament

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டது, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளை புதுச்சேரி மற்றும் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு நீட்டிப்பதற்கான மசோதாக்கள் மக்களவையில் கடந்த 12ம் தேதி நிறைவேற்றப்பட்டது, குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்றும் முடிவு வாபஸ் பெறப்பட்டது எனப் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

Advertisment

அதேபோல், நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான கடந்த 13 ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. கடந்த 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் வண்ணப் புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து அவை முழுக்க வீசி, அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோடியவர்களைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் வந்து, பாதுகாப்பு மீறல் குறித்து விளக்கம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்ட 15 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து வந்ததால் இந்த இரு அவைகளிலும் எந்த ஒரு விவாதமும் நடத்தப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், இன்று (18-12-23) காலை 11 மணிக்கு மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளுமே கூடியது. அப்போது நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதம் செய்ய வேண்டும் எனவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள்31 பேர் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவிட்டார். அதன்படி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தமிழச்சி பாண்டியன், சி.என்.அண்ணாதுரை, செல்வம், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திருநாவுக்கரசர், ஜெயக்குமார், விஜய் வசந்த் உள்ளிட்ட 31 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இந்த நடவடிக்கையை தொடர்ந்து மக்களவை ஒரு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

Advertisment