பூ விற்கும் பெண்ணின் வங்கி கணக்கில் 30 கோடி பணம் கிரெடிட் ஆன சம்பவம் கர்நாடகத்தில் அச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சன்னபட்னா பகுதியை சேர்ந்தவர் மாலிக் புர்கான். இவருடைய மனைவி பெயர் ராகியம்மாள். இவர்கள் இருவரும் சந்தையில் பூ விற்று வருகிறார்கள். இந்நிலையில் வங்கி அதிகாரிகள் சிலர் அவரது வீட்டிற்கு வந்து ராகியம்மாளின் வங்கி கணக்கில் பெரும் தொகை கைமாறியதாகக் கூறி அவர்கள் இருவரையும் வங்கிக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது தான் அவர்களுடைய வங்கி கணக்கில் 30 கோடி ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்ட சம்பவம் அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.

Advertisment

இதுதொடர்பாக அவர்களிடம்விசாரணை நடத்திய வங்கி அதிகாரிகளிடம், "தன் மனைவி ஆன்லைன் மூலம் சேலை வாங்கியதாகவும், அந்த சேலைக்கு கார் ஒன்று பரிசாக விழுந்துள்ளதாக கூறி சிலர் தங்களுடைய வங்கி கணக்குகளை கேட்டு பெற்றதாக" ராகியம்மாளின் கணவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர்களுடைய வங்கி கணக்கை மர்ம நபர்கள் சிலர் பயன்படுத்துவதை அதிகாரிகள் கண்டுப்பிடித்துள்ளனர். இதுதொடர்பான அடுத்த கட்ட விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.