கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை; அமலுக்கு வரும் புதிய சட்டம்!

3 years in prison for failing to control crowd New law  Karnataka

17 வருடத்திற்கு பிறகு, நடப்பாண்டில் முதல் முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணி கடந்த ஜூன் 4ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதனை காண லட்சக்கணக்கானோர் அங்கு திரண்டதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி, சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

35 ஆயிரம் பேர் அமரக்கூடிய மைதானத்தில், 2 முதல் 3 லட்சம் பேர் வந்திருந்ததால் இந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது என்றும், கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு ஆர்சிபி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்றும் காவல்துறை அறிவுறுத்தலை மீறி வெற்றி பெற்ற அடுத்த நாளே வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தியதாக ஆர்சிபி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றது.

இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தின் எதிரொலியாக, கூட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக புதிய சட்டத்தை அமல்படுத்த கர்நாடகா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான மசோதா நேற்று (19-06-25) கர்நாடகா அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டது. இந்த மசோதா அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதற்கு முன்பு தங்களது அதிகார வரம்பிற்குள் இருக்கும் காவல் துறையிடம் உரிய அனுமதி பெற வேண்டும். காவல்துறையினர் திட்டமிட்டப்படி நிகழ்வை அனுமதிக்கலாம், இடத்தை மாற்றலாம், நேரத்தை மாற்றலாம் அல்லது அதை முற்றிலுமாக கூட ரத்து செய்யலாம். பெரும் நிகழ்ச்சியின் போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே முழு பொறுப்பு.

ஒரு வேளை அசம்பாவிதங்கள் ஏற்படும் பட்சத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் அபராதத்துடன் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். அரசியல் மற்றும் மத கூட்டங்களுக்கும் இந்த தண்டனை பொருந்தும். ஆனால், ஜாத்ரா, ரதோத்சவ, பல்லக்கி உற்சவ, தெப்பத் தெரு மற்றும் உருஸ் போன்ற மத நிகழ்வுகளுக்கு இந்த மசோதா பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சட்டத்தின் கீழ், கூட்ட நெரிசல் போன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இழப்பீடு வழங்க வேண்டும். இழப்பீடு செலுத்தவில்லை என்றால், அரசாங்கம் அந்த தொகையை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இருந்து வசூலிக்க முடியும். இது தவிர காவல்துறையின் உத்தரவுகளுக்கு கீழ்படியாத அல்லது இந்த சட்டத்தை மீறும் எந்தவொரு நபருக்கு ரூ.3 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

karnataka Prison rcb royal challengers bengallore stampede
இதையும் படியுங்கள்
Subscribe