வெறும் மூன்று மணிநேரத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதார் விவரங்களைக் கைப்பற்ற முடிந்ததாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் பாப்டிஸ்ட் ராபர்ட், தொடர்ந்து இந்திய இணையதளங்களில் எளிதில் திருடப்படும் நிலையில் இருக்கும் ஆதார் விவரங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறார். இவர் எல்லியர் ஆல்டர்சன் என்ற பெயரில் இயங்கும் தனது ட்விட்டர் பக்கத்தின் வழியாக இந்தத் தகவல்களை வெளியிடுகிறார். இந்நிலையில், வெறும் மூன்று மணிநேரத்தில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதார் விவரங்களை கைப்பற்ற முடிந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், ஆதார் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறுவது வேடிக்கையானது எனவும் கிண்டலடிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து இந்திய தனிமனித அடையாளத்திற்கான ஆணையம், ‘ஆதார் விவரங்கள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கின்றன. கடந்த 8 ஆண்டுகளில் ஒரு தகவல்கூட இப்படி களவுபோனதில்லை. ஆதார் விவரங்களைக் கைப்பற்றிவிட்டதாக கூறுவது உண்மைக்குப் புறம்பானது. ஆதார் மிகவும் நம்பத்தகுந்த அடையாள அட்டை’ என பதிலளித்துள்ளது.
இதற்கு முன்னர் பாப்டிஸ்ட் ராபர்ட் தெலுங்கானா அரசு இணையதளம், பி.எஸ்.என்.எல். இணையதளம் உள்ளிட்ட பல அரசு கட்டுப்பாட்டில் உள்ள இணையதளங்களில் இருந்து ஆதார் விவரங்களைக் கைப்பற்றி ஆதாரத்தோடு பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.