2G case -again- against- DMK- shocked- by court- order

Advertisment

தி.மு.க.விற்கு எதிரான 2-ஜி வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை தினமும் நடத்த டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது தி.மு.க மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி அரசில் 2-ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரம் தி.மு.க.வுக்கு எதிராக ஊதி பெரிதாக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ) தொடர்ந்த வழக்கில் தி.மு.க எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த டெல்லியிலுள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், ‘’குற்றச்சாட்டுகளுக்கு உரிய எந்த ஆதார ஆவணங்களையும் சி.பி.ஐ.தாக்கல் செய்யவில்லை‘’ என்பதை சுட்டிக்காட்டி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அத்தனை பேரையும் விடுதலை செய்து கடந்த 2017-ல் தீர்ப்பளித்தது.

மேலும், இந்த வழக்கை தொடர்ந்த சி.பி.ஐ. அதிகாரிகளைக் கண்டிக்கவும் செய்தது சி.பி.ஐநீதிமன்றம். இந்த நிலையில், வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது சி.பி.ஐமற்றும் அமலாக்கத்துறை.

Advertisment

ஆனால், இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நீண்ட மாதங்களாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், கடந்த மாதம் மீண்டும் வழக்கை தூசு தட்டியது சி.பி.ஐ.!பிரதமர் மோடியின் உத்தரவின் படியே தி.மு.க.வுக்கு எதிராக இந்த வழக்கில் சி.பி.ஐ.யும் அமலாக்கத்துறையும் தீவிரம் காட்டுகின்றன என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சி.பி.ஐ.யும் அமலாக்கத்துறையும் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரிஜேஸ் சேத்தியிடம் கடந்த மாதம் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களில், ‘’2 ஜி-க்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும்’’ என கோரிக்கை வைத்திருந்தன. ஆனால், அரசியல் காரணங்களுக்காக இத்தகைய கோரிக்கை வைக்கப்படுகிறது என்கிற ரீதியில், சி.பி.ஐமற்றும் அமலாக்கத்துறையின் கோரிக்கைக்கு எதிராக ஆ.ராசா. கனிமொழி உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்து மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இதனை ஏற்ககூடாது என வலியுறுத்தி வாதம் செய்தது சி.பி.ஐ.! இரு தரப்பின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சேத்தி, வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் 29 -ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருந்தார். அதன்படி இன்று தீர்ப்பளித்த நீதிபதி சேத்தி, ‘’2 ஜி வழக்கில் சி.பிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விரைவாக நடத்தி முடிக்க எந்தத் தடையும் கிடையாது. விரைந்து விசாரிக்கும் வகையில், அக்டோபர் 5-ஆம் தேதி முதல் தினமும் இவ்வழக்கை விசாரிக்க வேண்டும்‘’ என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டார். அதனால், அடுத்த வாரம் முதல் 2-ஜி வழக்கு மீண்டும் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தக் கூடும்!

Advertisment

Ad

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலிலும், தி.மு.க.தான் ஆட்சியை இந்த முறை கைப்பற்றும் என்கிற நிலையிலும் 2-ஜி வழக்கு மீண்டும் தூசு தட்டப்படுவது தி.மு.க.வை அதிர வைத்திருக்கிறது.