Skip to main content

எலான் மஸ்க்கால் நடுக்கும் ஊழியர்கள்; அசராத இந்தியர்

Published on 05/11/2022 | Edited on 05/11/2022

 

25-Year-Old Man's Post After Getting Fired From Twitter Wins Internet

 

உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க், உலகின் முன்னணி சமூக வலைதளமான ட்விட்டரை தன் வசப்படுத்திக் கொண்டார். முதலில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்த நிலையில், பிறகு அந்த முடிவில் இருந்து பின் வாங்கினார். அதன் பிறகு ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்திற்குச் சென்ற நிலையில், பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு முழுமையாக ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார்.

 

இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்த எலான் மஸ்க், தற்போது அந்த நிறுவனத்தின் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதோடு, ஆட்குறைப்புப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். அதன்படி ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்திய அடுத்த நாளே தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த பராக் அகர்வாலைப் பொறுப்பில் இருந்து நீக்கினார். அத்துடன் அந்நிறுவனத்தின் சட்டத் துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல், தலைமை நிதி அதிகாரி நெட் சேகல் ஆகியோரையும் பதவியிலிருந்து நீக்கினார்.

 

ட்விட்டரில் மொத்தம் இருந்த 7,500 ஊழியர்களைப் பாதியாகக் குறைக்க எலான் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  அதன்படி ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றிய ஏராளமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் நிறையப் பேர் தாங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது குறித்து தங்களது ஆதங்கத்தை ட்விட்டரில் பகிர்ந்து வரும் நிலையில், அதற்கு நேர்மாறாக இந்தியாவைச் சேர்ந்த ட்விட்டர் ஊழியரான யஷ் அகர்வால், தான் நீக்கப்பட்டதை மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.  

 

25 வயதான யஷ் அகர்வால்,  ட்விட்டரில் பொதுக் கொள்கைக் குழுவில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், பணியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து யஷ் அகர்வால் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “இப்போதுதான் வேலை பறிபோனது. ட்விட்டரில் பணியாற்றியது மிகவும் பெருமைக்குரியது. இந்த கலாச்சாரமிக்க குழுவில் ஒரு பகுதியாக இருந்ததே பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்” எனச் சிரித்த முகத்துடன், கையில் ட்விட்டர் சின்னம் பொறிக்கப்பட்ட இரண்டு தலையணைகளுடன் மகிழ்ச்சியாக ஒரு புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.  யஷ் அகர்வால் தனக்கு வேலை போன விஷயத்தை நேர்மறையாக அணுகிய விதம் பலரிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. 

 

எலான் மஸ்க் பெரும்பாலான இந்தியர்களை பணிநீக்கம் செய்வதாக கூறப்படுகிறது. ஆனால் ட்விட்டர் இந்தியா தரப்பிலிருந்து இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமெரிக்க அதிபர் தேர்தல்; டிரம்புக்கு ஷாக் கொடுத்த எலான் மஸ்க்!

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Elon Musk shocked Trump at US Presidential Election

குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட்  ட்ரம்ப், அமெரிக்க அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. 

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் எனக் கடந்த சில தினங்களுக்கு முன் கூறப்பட்டு வந்தது. இதற்கான ஆதரவுகளையும் டிரம்ப் தீவிரமாகத் திரட்டி வருகிறார்.

இதற்கிடையே, குடியரசு கட்சி சார்பில், வேட்பாளராக நிற்க போவது யார் என்பதற்கான தேர்தல், அந்த கட்சி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் நடத்தப்பட்டு அதில் அதிக வாக்கு செல்வாக்கு பெரும் நபர் தான், அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார். அந்த வகையில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து, அந்த கட்சியைச் சேர்ந்தவரான நிக்கி ஹாலே போட்டியிட்டார். இவர்கள் இருவருக்கும் கடும் போட்டி நிலவி வந்தது. 

Elon Musk shocked Trump at US Presidential Election

அந்த வகையில் கடந்த 3ஆம் தேதியும், 5ஆம் தேதியும் வேட்பாளர் தேர்தல் நடைபெற்றது. ஆனால், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே, நிக்கி ஹாலே போட்டியில் இருந்து விலகினார். இதன் மூலம் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் நியமிக்கப்பட்டார். அதே போல், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன், அதிபர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இருவரும், தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

அதே வேளையில், தனது தேர்தல் பிரச்சாரங்களுக்கு பெரும் நிதி தேவைப்படுவதால், பல முன்னணி தொழிலதிபர்களை டொனால்ட் டிரம்ப் சந்தித்து நிதியுதவி கோரி வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்தவரும், உலகின் பெரும் பணக்காரருமான டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்கை டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியது.  

இந்த நிலையில், டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து எலான் மஸ்க் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில், வேட்பாளர்களில் எவருக்கும் நான் நிதியுதவி அளிக்கப்போவதில்லை’ எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். எலான் மஸ்க்கின் இந்த அதிரடி அறிவிப்பு, டிரம்பிற்கு பின்னடைவாக மாறலாம் எனக் கூறப்படுகிறது. 

Next Story

“‘எக்ஸ் மெயில்’ விரைவில் அறிமுகப்படுத்தப்படும்” - எலான் மஸ்க்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
X Mail will be launched soon Elon Musk

எக்ஸ் மெயில் என்ற பெயரில் விரைவில் மின்னஞ்சல் சேவை அறிமுகப்படுத்தப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் - எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க் உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரைக் கடந்த 2022 ஆம் ஆண்டு தன்வசப்படுத்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில் என்ற பெயரில் மின்னஞ்சல் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ஜிமெயில் சேவைகள் நிறுத்தப்படும் என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் எக்ஸ் மெயில் சேவை தொடங்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.