நிலச்சரிவில் சிக்கி 25 தமிழர்கள் மாயம்!

25 Tamils ​​trapped in a landslide 

தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் கடந்த ஜூலை 30 தேதி (30.07.2024) நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலை என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இரு நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் முப்படையைச் சேர்ந்த வீரர்கள், பேரிடர் மீட்புப்படையினர் உள்ளிட்ட வீரர்கள் ஐந்தாவது நாளாக இன்றும் (03.08.2024) மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 344ஆக உயர்ந்துள்ளது. மேலும் முண்டக்கை, சூரல்மலை மற்றும் மேப்பாடி ஆகிய இடங்களில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் முண்டக்கை பகுதியில் அமைக்கப்பட்ட இரும்பு பாலம் வழியாக பல்வேறு உபகரணங்கள் கொண்டு சென்று மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதோடு இந்தியக் கடற்படை மற்றும் விமானப்படை ஹெலிகாப்டர்கள் நிலச்சரிவு குறித்த தணிக்கையில் ஈடுபடுகின்றன. இதனால் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் முழுவீச்சில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளதால் சூரல்மலை, முண்டக்கை மற்றும் மேப்பாடியில் நண்பகல் 12 மணி வரை ட்ரோன்கள் பறக்கத் தடைவிதிக்கப்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி வீடுகளை இழந்த 130 தமிழர்கள்நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கிய 25 தமிழர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை என மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள தமிழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மாயமான தமிழர்கள் 25 பேரில் வயநாட்டிற்கு குடிபெயர்ந்தவர்கள் 22 பேரும், தமிழகத்தில் இருந்து சென்ற 3 பேரும் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Kerala landslide wayanad
இதையும் படியுங்கள்
Subscribe