23 year old girl helped in pulwama incident

Advertisment

கடந்த ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு 23 வயது பெண் ஒருவர் உதவியுள்ளதாகக் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 14, 2019- அன்று, ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் இந்திய வீரர்கள் சென்ற பேருந்து மீது 200 கிலோ எடைகொண்ட வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று மோதியது. பயங்கரவாதிகளின் இந்த சதித்திட்டத்தால் 40 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட தேசிய புலனாய்வு முகமை செவ்வாய்க்கிழமை இதற்கான குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தது. சுமார் 13,000 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிக்கை ஜம்முவில் உள்ள நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி, 35 கிலோ அதிசேத விளைவிப்பு ஆர்.டி.எக்ஸ் வெடிபொருள் மார்ச் - மே 2018-ற்குஇடையே மூன்று தடவையாக பாகிஸ்தானிலிருந்து இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் - ஜம்மு எல்லையின் ஹிராநகர் செக்டாரிலிருந்து ஊடுருவி இந்தப் பொருட்களை இங்கு கொண்டு வந்துள்ளனர் எனவும் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பயங்கரவாதிகளுக்கு உதவியதில் ஒரு இளம் பெண் முக்கிய பங்கு வகித்ததாகத் தேசிய புலனாய்வு அமைப்பின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மார்ச் மாதம் காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட முக்கிய குற்றவாளி முகமது உமர் பாரூக் என்ற நபருடன் இன்ஷா ஜான், என்ற அந்த 23 வயது பெண் தொடர்பிலிருந்ததாக கூறப்பட்டுள்ளது. தொலைபேசி மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் வாயிலாக அவர்கள் நெருக்கமான தொடர்பிலிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் இருவருக்கும் இடையிலான செய்தி பரிமாற்றங்களையும், பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்ததில் இன்ஷா ஜானுக்கு பங்கு இருப்பதையும் கண்டுபிடித்துள்ளதாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.