ADVERTISEMENT

எல்லையில் 200 சீன வீரர்களை தடுத்து நிறுத்திய இந்தியா - வெளியான அதிர்ச்சி தகவல்!

12:20 PM Oct 08, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா மற்றும் சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஆண்டு மோதல் வெடித்தது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தார்கள். இந்த மோதலில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், நால்வர் மட்டுமே உயிரிழந்ததாக சீனா கூறியுள்ளது. இந்த மோதலைத் தொடர்ந்து இந்தியா - சீனா இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. படை விலக்கல் தொடர்பாகவும், படை குறைப்பு தொடர்பாகவும் இரு நாடுகளிடையே சில தீர்மானங்கள் எட்டப்பட்டன. அந்த தீர்மானங்கள் படிப்படியாக அமலுக்கு வருகின்றன. அதேபோல் இருநாடுகளுக்குமிடையே தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

இந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி, நூற்றுக்கும் மேற்பட்ட சீன இராணுவத்தினர் 55 குதிரைகளுடன் துன் ஜுன் லா கணவாயைக் கடந்து, உத்தரகண்ட் மாநிலத்தின் பராஹோட்டி பகுதிக்குள் ஊடுருவியதாகவும், இந்திய எல்லைக்குள் ஐந்து கிலோமீட்டர் வரை வந்த அவர்கள், மூன்றுமணி நேரம் இந்திய எல்லைக்குள் இருந்ததாகவும் தகவல் வெளியானது. மேலும், இந்திய எல்லைக்குள் வந்த அவர்கள், பாலம் உள்ளிட்ட இந்தியாவின் சில அடிப்படை கட்டமைப்பை சேதப்படுத்தியதாகவும் தகவலறிந்து இந்திய இராணுவம் வருவதற்குள் சீன இராணுவத்தினர் இந்திய எல்லையைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்தநிலையில், கடந்த வாரம் சுமார் 200 சீன வீரர்களை இந்திய எல்லைக்கு மிக அருகில் இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதாக பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சில மணிநேரம் இருநாட்டு இராணுவ வீரர்களும் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே குவிந்திருந்ததாகவும், பின்னர் இருநாடுகளைச் சேர்ந்த எல்லைப்பகுதி இராணுவ தளபதிகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாட்டு இராணுவ வீரர்களும் கலைந்து சென்றதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து எல்லையில் சீனா அத்துமீறுவதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT