20 மூத்த தலைவர்கள் இராஜினாமா - காங்கிரஸ் தலைமைக்கு புதிய தலைவலியாகும் ஜம்மு காஷ்மீர்!

sonia - ghulam nabi azad

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ஆம் ஆண்டு நீக்கப்பட்ட நிலையில், அங்கு சட்டமன்றத் தேர்தலை நடத்த மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்துவருகிறது. இதனையடுத்து, ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் ஜி.ஏ. மிர்ரை மாற்றக் கோரிஅக்கட்சியிலிருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் என சுமார் இருபது மூத்த தலைவர்கள் தங்களது பதவியை இராஜினாமா செய்துள்ளனர். இராஜினாமா செய்தவர்களுள் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸின் துணைத் தலைவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இராஜினாமா செய்துள்ள அனைவரும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்திற்கு நெருக்கமானவர்கள் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. இராஜினாமா செய்துள்ளவர்கள் தங்களது இராஜினாமா கடிதத்தில், ஜி.ஏ. மிர்ரின் பதவிக்காலத்தில் காங்கிரஸ் பேரழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்றும், இன்றுவரை முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், கட்சி நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் என 200க்கும் மேற்பட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கட்சியிலிருந்து விலகி வேறு கட்சிகளில் இணைந்துள்ளனர் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், ஜி.ஏ. மிர் மீது பல குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் வைத்துள்ள அவர்கள், அவரை தலைவர் பதவியிலிருந்து மாற்றாதவரை தாங்கள் கட்சியில் எந்தப்பொறுப்பையும் வகிக்க மாட்டோம் எனவும் கூறியுள்ளனர். ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் உட்கட்சி பூசலைச் சந்தித்துவரும் காங்கிரஸ் தலைமை, விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள ஜம்மு காஷ்மீரிலும் உட்கட்சி பூசலைக் கையாள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

congress jammu kashmir sonia gandhi
இதையும் படியுங்கள்
Subscribe