/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4458.jpg)
இந்தியா முழுக்க தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அந்த வகையில், கடந்த 2 வாரங்களாக சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோதக்காளியின் விலை ரூ. 120 முதல் ரூ. 150 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் தக்காளி விலை கிலோ ரூ. 150-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் தக்காளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனிடையே, வியாபாரிகள் தக்காளியை பதுக்கி வைத்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனால்,தக்காளியை பதுக்கினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் விவசாயத்தில் அதிக வருவாய் ஈட்டியதற்காக தக்காளி விவசாயி ஒருவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம், அன்னமய்யா மாவட்டம், மதனப்பள்ளி அருகே உள்ள போடிமல்லதின்னா கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜசேகர் (62). இவர் அந்த பகுதியில் உள்ள 4 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டு வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல்மாடுகளை வளர்த்து பால் வியாபாரமும் செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் நாடு முழுவதும் தக்காளியின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. இதனால், விவசாயியான ராஜசேகர் கடந்த 20 நாட்களில் பல லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் ராஜசேகர் வழக்கம் போல் மாடுகளில் பால் கறந்து வீடுகள் மற்றும் கடைகளில் விநியோகம் செய்து வீடு திரும்பியுள்ளார். அப்போது, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் அவர் சென்று கொண்டிருந்த போது அங்கு மறைந்திருந்த முகம் தெரியாத மர்ம நபர்கள் அவரை வழிமறித்துள்ளனர். அதன் பின்னர், ராஜசேகரின் கை கால்களைக் கட்டி அவரை சரமாரியாகத்தாக்கியுள்ளனர். மேலும், ராஜசேகரின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். பால் விநியோகம் செய்த ராஜசேகர் இரவு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அவரை தேடி வந்துள்ளனர்.
நேற்று முன்தினம் மதியம் ராஜசேகர் கொலையான சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதன் பின்னர் காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, ராஜசேகர் சடலம் அருகே தக்காளி விற்றதற்கான ரூ. 30 லட்சம் மதிப்புள்ள ரசீது இருந்தது. எனவே, மர்ம நபர்கள்ராஜசேகர் தக்காளி விற்று பணம் பெற்று வருவதை நோட்டமிட்டு அவரை கொலை செய்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றார்களா என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)