மூளைச்சாவு அடைந்ததால் இனி உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என கூறப்பட்ட 17 வயது சிறுவன், இறுதி சடங்கிற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கும் போது பிழைத்த அதிசயம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.

Advertisment

18 year old telangana youth comes alive at his funeral

தெலுங்கானவை சேர்ந்த கிரண் என்பவர் கடந்த ஜூன் 26 ஆம் தேதி கடுமையான காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து நிலையில் கடந்த ஜூன் 28 ஆம்தேதி அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தொடர் சிகிச்சைகள் பலனளிக்காததால் ஜூலை 3 ஆம் தேதி அவர் கோமா நிலைக்கு தள்ளப்பட, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளை சாவு அடைந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

மேலும் அவர் பிழைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும், சுவாச கருவிகளை நீக்கினால் உயிர் போய்விடும் என்றும் கூறியுள்ளனர். அவரால் பேசவும், மற்றவர்கள் பேசுவதை கேட்கவும் முடியாது, அவருக்கு எந்த உணர்வும் இருக்காது என கூறியுள்ளனர். அவரது சுவாசத்திற்கு உதவும் கருவிகளை எடுத்துவிடுவதாகவும், அந்த சிறுவனின் இறுதி சடங்கிற்கான வேலைகளை பாருங்கள் என்றும் அவரது தாயிடம் கூறியுள்ளனர்.

Advertisment

ஆனால் தனது மகன் உயிர் தனது சொந்த கிராமத்திலேயே தான் போக வேண்டும் என கூறி கருவிகளை எடுக்காமல் அவரது தாய், கிரணைசொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளார். இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில், உறவினர்கள் அனைவரும் கிரண் வீட்டிற்கு வந்துள்ளனர்.

அப்போது கிரணின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை பார்த்த அவரது தாய் உடனடியாக மீண்டும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து ஹைதராபாத்தில் உள்ள மூத்த மருத்துவர்கள் ஆலோசனைப்படி அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. தொடர் சிகிச்சைக்கு பின்னர் இறந்துவிடுவார் என கூறப்பட்ட கிரண் தற்போது பூரண நலம் பெற்று ஆரோக்கியத்துடன் உள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.