/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dl-train-ins-art.jpg)
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், நடக்கும் ஆன்மீக திருவிழாவான ‘மகா கும்பமேளா’ கடந்த ஜனவரி 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வு பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்கள் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜ் நகரை நோக்கி வருவதால் அந்த இடம் முழுவதும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பித்து வருகின்றது.
இந்நிலையில் புது டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து கும்பமேளாவுக்காக இயக்கப்பட்ட ரயியிலில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏற முயன்றதால் நடைமேடைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. புது டெல்லி ரயில் நிலையத்தின் 14வது நடைமேடையில் நேற்று (15.02.2025) இரவு 10 மணியளவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி14 பெண்கள் 18 பேர் உயிரிழந்தனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்தனர். கூட்ட நெரிசலை நேரில் கண்ட ஒருவர் கூறுகையில், “இரவு 09:30 மணியளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
13வது நடைமேடையில் இருந்தவர்கள் 14 மற்றும் 15வது நடைமேடைகளில் ரயில்களைக் கண்டதும், அவர்கள் அந்த நடைமேடைகளை நோக்கி நகர்ந்தனர். ஆனால் ரயில்களின் நடைமேடைகள் மாற்றப்படவில்லை. இருப்பினும் கூட்டம் அதிகமாக இருந்ததால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார். அதே சமயம் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அறிய உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர். ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)