Skip to main content

இந்தியாவில் தடுப்பூசி செலுத்த தொடங்கி ஓராண்டு நிறைவு... எவ்வளவு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன..? 

Published on 16/01/2022 | Edited on 16/01/2022

 

156 doses of vaccine in a year!

 

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கப்பட்டது. புனே சீரம் நிறுவன தயாரிப்பான கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்த தொடங்கப்பட்டது. 

 

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் கடந்த இரண்டு வருடங்களாக அச்சுறுத்தி வருகிறது. உலக நாடுகள் கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்தாலும், அதில் முக்கியமானது கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது. இந்தியாவில், கோவாக்ஸின், கோவிஷீல்டு உள்ளிட்ட பல்வேறு கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்தாலும், மேற்குறிப்பிட்ட இரண்டு மட்டுமே அதிகளவில் மக்களுக்கு செலுத்தப்பட்டுவருகிறது. அதேசமயம், மக்கள் மத்தியில் இன்னும் கரோனா தடுப்பூசி குறித்த அச்சமும் தேவையற்ற வதந்திகளும் நிலவி வரும் நிலையில், மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. 

 

அதன்படி தமிழ்நாட்டில் பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுகின்றன. மேலும், வீடு வீடாகச் சென்றும் தடுப்பூசி போடப்பட்டது. அதேசமயம் மக்கள் மத்தியிலும் தடுப்பூசியின் அச்சம் விலகி, தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டினர். இதனால், தடுப்பூசி செலுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதன் காரணமாக தடுப்பூசி இயக்கம் பெரும் வெற்றி அடைந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி 100 கோடி டோஸ்கள் என்ற இலக்கை எட்டியது. கடந்த 7ம் தேதி 150 கோடி டோஸ்கள் என்ற மாபெரும் இலக்கை எட்டியது.

 

இந்நிலையில் இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதில் இதுவரை 156.76 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 92 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளதாகவும், 68 சதவீதத்திற்கும் அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தடுப்பூசி இயக்கத்தின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இன்று பிற்பகல் சிறப்பு தபால் தலையை மத்திய அரசு வெளியிடுகிறது.

 

அதேபோல், கரோனா பரவலின் மாறுபட்ட திரிபுகளிலிருந்து காத்துகொள்ளவும், முன்னெச்சரிக்கை டோஸ்கள் எனப்படும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியும் ஜனவரி 10ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. முதல்கட்டமாக சுகாதாரம் மற்றும் முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த பிரிவில் இதுவரை 43.19 லட்சத்திற்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி 15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு 3,38,50,912 முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிகரிக்கும் கொரோனா தொற்று; மீண்டும் தொடங்கிய தடுப்பூசி உற்பத்தி!

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

covid infection increased again started covershield vaccination 

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகள் கொரோனாவை தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவனம் கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியான கோவிட்ஷீல்டை உற்பத்தி செய்து வந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்ததால் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தடுப்பூசி உற்பத்தி செய்வதை நிறுத்தியது.

 

தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் மீண்டும் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக சீரம் நிறுவனத்தின் சிஇஓ அடார் பூனவல்லா தெரிவித்துள்ளார். 


 

Next Story

“தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்தை மத்திய அரசு நிறுத்தியுள்ளது” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published on 28/12/2022 | Edited on 28/12/2022

 

minister ma subramanian talk about corona vaccine

 

பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்து கொரோனா விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

 

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சீனா, ஜப்பான், தைவான், தென்கொரியா, ஹாங்காங் ஆகிய ஐந்து நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும். கொரோனா விதிமுறை என்பது 100 சதவிகிதம் அமலில் இருக்கிறது. திரையரங்குகள், பொது நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள், புத்தாண்டு கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்தப்படும் இடங்கள் என எதுவாக இருந்தாலும் கொரோனா விதிமுறையைக் கடைப்பிடித்து நடத்துவது நல்லது. மகிழ்ச்சியாக இருப்பதற்கு தான் நாம் விழாக்களை நடத்துகிறோம். எனவே கொண்டாட்டங்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் நமக்கு பலனளிக்கும். அதனால் கொண்டாட்டத்தின் போது தனிமனித இடைவெளி, முககவசங்கள் அணிவது உள்ளிட்டவற்றை நீங்களே உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

 

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்று யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம். ஏனென்றால் சீனாவில் பரவி வரும் பிஎஃப் 7 என்ற கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் தன்மையுடையது என்று சொல்லப்படுகிறது. பிஎஃப் 7 என்ற கொரோனா வைரஸால் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால், அவரின் மூலம் 17 அல்லது 18 பேருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. அதனால் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.

 

தடுப்பூசி குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “கொரோனா தடுப்பூசியை அதிகப்படுத்துவது மத்திய அரசின் கையில்தான் உள்ளது. மேலும், தடுப்பூசியின் உற்பத்தியையும், விநியோகத்தையும் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. அத்தோடு ஒரு புதிய தடுப்பு மருந்து நடைமுறைக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே வழங்கப்படுகிற மூக்கின் வழியே மட்டும் செலுத்தும் அந்த மருந்துக்கு ரூ.800 விலை நிர்ணயித்திருப்பதாகச் செய்திகளின் வாயிலாகப் பார்த்தேன். இது தொடர்பான அறிவிப்பு அரசுக்கு முறையாக வரவில்லை. மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை அரசு மருத்துவமனை மூலமாக மக்களுக்கு வழங்க வேண்டும் என்று நம் முதல்வரின் வாயிலாக மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளோம்” என்றார்.