
5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று கொலை செய்யப்பட்ட சம்பவம் சத்தீஸ்கரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமி. இவர் கடந்த 24ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு சிறுமியை தேடி வந்தனர்.
இதற்கிடையில், ஒரு குடியிருப்பு காலணியில் கட்டுமானத்தில் உள்ள வீட்டில் ரத்த வெள்ளத்தில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும், கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, பாதிக்கப்பட்ட சிறுமியை 13 வயது சிறுவன் ஒருவர் அழைத்துச் செல்வது காணப்பட்டது.
இதனையடுத்து, அந்த சிறுவனை அடையாளம் கண்டு அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பல அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது. ஆபாச படங்களை பார்ப்பதில் அடிமையான சிறுவன், பாதிக்கப்பட்ட சிறுமி தனியாக இருப்பதை பார்த்து கட்டுமான பணியில் இருந்த வீட்டிற்குச் அழைத்துச் சென்றுள்ளான். அதன் பின்னர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளான். இதற்கு அந்த சிறுமி கடுமையாக எதிர்த்ததால், கல் மற்றும் மரக்கட்டையை வைத்து சிறுமியை தாக்கி கொலை செய்துள்ளான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சிறுவனை கைது செய்து சிறார் நீதி சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.