12 வயது என்ற வரம்பு நியாயமானதா? - நிர்பயாவின் தாயார் வேதனை

இந்தியாவில் தொடர்ந்து சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகளை அனுபவித்து வரும் சூழலில், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது கத்துவா சிறுமி பாலியல் வன்புணர்வு சம்பவம். இந்த சம்பவத்தைக் கண்டித்தும், பாலியல் குற்றங்களைத் தடுக்கவும் கோரி குரல்கள் எழுப்பப்பட்ட நிலையில், இதுதொடர்பான அவசர சட்டம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் குறைப்பது தொடர்பான பொதுநல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர். மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி, போக்ஸோ சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர இருப்பதாகவும், அதன்படி 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்புணர்வு செய்தால் மரண தண்டனை விதிக்கப்படுவதற்கான சட்டத்திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த சட்டத் திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் இன்று ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட நிர்பயாவின் தாயார் இதுகுறித்து விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அவர் பேசுகையில், ‘12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் குற்றத்திற்கு தூக்குத்தண்டனை விதிக்கப்படுவது பாராட்டுக்குரியது. ஆனால், வயதில் மூத்தவர்கள் என்றால் என்ன செய்வது? வன்புணர்வை விட மிகக் கொடுமையான வலி என்று இந்த உலகில் வேறெதுவுமே கிடையாது. இந்தக் குற்றத்தில் ஈடுபடும் ஒவ்வொருவரும் தூக்கிலிடப்பட வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

kathuva Nirbhaya unnao
இதையும் படியுங்கள்
Subscribe