12 kg Baahubali Samosa; 71 thousand rupees if eaten in half an hour; Challenging shop owner

Advertisment

பெரிய உணவு நிறுவனங்கள் முதல் சிறிய உணவு கடைகள் வரை தங்களது வியாபாரத்தை பெருக்குவதற்காக சில நூதன முறைகளை பின்பற்றுவதும், சில அதிரடி இலவச அறிவிப்புகளை வெளியிடுவதும் தொடர்ந்து ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களிலும் வெளியாகி வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் 12 கிலோ ஒற்றை சமோசாவை அரை மணி நேரத்தில் சாப்பிட்டால் 71 ஆயிரம் ரூபாய் பரிசு தரப்படும் என சமோசா கடை உரிமையாளர் ஒருவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலம் மீரட் பகுதியில் சமோசா மற்றும் இனிப்பு கடை நடத்தி வரும் சுபகௌசல் என்பவர் 12 கிலோ எடை கொண்ட ஒரு சமோசாவை தயாரித்துள்ளார். உருளைக்கிழங்கு, பட்டாணி ஆகியவைகளை வைத்து சமைக்கப்பட்ட இந்த சமோசாவை அரை மணி நேரத்தில் ஒருவர் சாப்பிட்டு காண்பித்தால் 71 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக மூன்று சமையல் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கியுள்ள இந்த சமோசாவிற்கு 'பாகுபலி' சமோசா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சமோசாவை சாப்பிடும் போட்டிக்கு விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு சமோசாவின் விலை 1500 ரூபாய் என்றும், போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றால் 71 ஆயிரம் ரூபாய் தரப்படும் இல்லையேல் சமோசாவிற்கான 1500 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பாகுபலி சமோசா சாப்பிடும் கோதாவில் இறங்க 50 பேர் முன்பதிவு செய்துள்ளதாக அக்கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.