110 students arrive India from Iran tension

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்து வருவதால், அதனை தடுக்கும் வகையில் ஈரானோடு ஆயுதக் கொள்கை தொடர்பான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா இறங்கியது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், கடந்த 13ஆம் தேதி அதிகாலை ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் ஈரானை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகம், அணுசக்தி நிலையங்கள், கச்சா எண்ணெய் கிடங்குகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோர் பலியாகினர். மேலும், ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர ராணுவ அதிகாரி உள்ளிட்ட பல ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை தடுக்கவே தாக்குதல் நடத்தினோம் என்று இஸ்ரேல் தெரிவித்தது. இருப்பினும், இந்த தாக்குதலுக்கு பின்னால், அமெரிக்காவின் தூண்டுதல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும், ஏவுகணைகள் மூலமாகவும், ட்ரோன்கள் மூலமாகவும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

Advertisment

இரு நாடுகளுக்கு இடையில் 6வது நாளாக நடக்கும் தொடர் தாக்குதலில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளதால், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால், உலக மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதற்கிடையில், ஈரானில் வசித்து வரும் இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய தூதரகம் ஈடுபட்டு வருகிறது.

அதன்படி, முதற்கட்டமாக ஈரானில் உயர்கல்வி படிக்கும் 110 மாணவர்கள், ஈரானில் இருந்து பேருந்து மூலம் ஆர்மீனியா நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். அதனை தொடர்ந்து, அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் அவர்கள் அனைவரும் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஈரானில் இருந்து அழைத்து வரப்பட்ட 110 இந்திய மாணவர்களும் இன்று (19-06-25) காலை பாதுகாப்பாக சிறப்பு விமானத்தில் டெல்லிக்கு வந்தடைந்தனர். விமானத்தில் இருந்தவர்களில் 90 மாணவர்கள் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். பாதுகாப்பாக இந்தியா வந்துள்ளதை அடுத்து அவர்கள், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.