
அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 16 கட்சிகள் பங்கேற்றன. ஆறு மாத காலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் திமுக சார்பில் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்த கூட்டம் இன்று (18.7.2023) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கினார்.26 எதிர்க்கட்சிகளின் சார்பாக இந்த கூட்டம் நடைபெற்றது. இன்று மதியம் 12:00 மணிக்குத் தொடங்கிய கூட்டம் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கொடுத்த பரிந்துரையின் பேரில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (INDIA) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைந்த கூட்டணி (INDIAN NATIONAL DEVELOPMENTALINCLUSIVE ALLIANCE) என்பதன் சுருக்கமே (INDIA) இந்தியாவாகும்.
இக்கூட்டத்தின்நிறைவாக நன்றியுரை ஆற்றிய மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ''11 பேர்கொண்ட வழி நடத்தும் குழுவை அமைப்பதற்குத்திட்டமிட்டுள்ளோம். நாட்டின் நலனைக் கருத்தில்கொண்டே எதிர்க்கட்சிகள் ஒன்று கூட்டியுள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல் ரீதியாகக் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தேசத்தைக் காக்க இங்கு ஒன்றுகூடியுள்ளோம். அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியவை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஏவப்படுகிறது. பாஜக அரசு ஜனநாயகம், அரசியலமைப்பு ஆகியவற்றை அழிக்க முயற்சி செய்கிறது. கூட்டணியின் பெயர் இந்தியா (INDIAN NATIONAL DEVELOPMENTAL INCLUSIVE ALLIANCE). கூட்டணிக்கு வைக்கப்பட்ட இந்த பெயரை அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 11 பேர்கொண்ட வழி நடத்தும் குழு குறித்து மும்பையில் அடுத்து நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்'' என்றார்.
Follow Us