Skip to main content

4 ஆம் வகுப்பு தேர்வுக்கு தயாராகும் 105 வயது கேரள மூதாட்டி..!

Published on 20/11/2019 | Edited on 21/11/2019


கேரளாவில் மாநில எழுத்தறிவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எந்த வயதிலும் தேர்வு எழுத விரும்புவோர், பாதியில் பள்ளி படிப்பை முடித்தவர்கள், கல்வி கற்க ஆசைப்படுபவர்கள் என இவர்களுக்காக இந்த சிறப்பு கல்வி திட்டமானது இயங்கி வருகிறது. கேரளா மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் பாகீரதி அம்மையார் (105). இவருக்கு 6 பிள்ளைகளும் 16 பேர பிள்ளைகளும் உள்ளனர். இவர் சிறுவயதில் பள்ளி படிப்பில் ஆர்வமிக்கவராக இருந்துள்ளார். ஆனால் தனது 9 வயதில் தனது சகோதர, சகோதரிகளை பார்த்துக் கொள்வதற்காக பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளார்.


இதனால் நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆசை வெறும் கனவாகி போய் விட்டது. தற்போது 105 வயதாகும் பாகீரதி அம்மையார் மூன்றாம் வகுப்பில் நிறுத்திய படிப்பை தொடர முயற்சி செய்தார்.இதனால் நான்காம் வகுப்பிற்கான பாட புத்தகத்தை படித்து வந்த அவர் மாநில எழுத்தறிவு இயக்கத்தின் மூலம் கொல்லத்தில் உள்ள தன்னாட்சி கல்வி நிறுவனத்தில் தேர்வு எழுதவுள்ளார். கேரளாவில் இந்த கல்வி திட்டத்தின் மூலம் கடந்த வருடம் 96 வயதில் ஒரு மூதாட்டி எழுத்தறிவு தேர்வில் நூற்றுக்கு 98 மதிப்பெண்களை எடுத்து சாதித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேலம்மாள் பாட்டி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

Published on 28/07/2023 | Edited on 28/07/2023

 

Chief Minister M.K.Stalin condolence on Velammal grandmother

 

தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் கொரோனா கால பேரிடர் நிவாரணத் தொகையைப் பெற்ற மகிழ்ச்சியை புகைப்படக் கலைஞர் ஒருவர் எடுத்த புகைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் வேலம்மாள் பாட்டி. இவர் கடந்த ஒரு சில தினங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து நேற்று இரவு உயிரிழந்தார். வேலம்மாள் பாட்டி உயிரிழந்த சம்பவம் மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

இந்நிலையில், வேலம்மாள் பாட்டி மறைவுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். கொரோனா பேரிடர் கால நிவாரணமாகத் திமுக அரசு வழங்கிய நிவாரணத் தொகையைப் பெற்றபோது, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்த அவரது புன்னகை வழியாக, அவர் என்றும் நம்மிடையே நிலைத்திருப்பார். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலம்மாள் பாட்டி புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டு, “இந்த ஏழைத்தாயின் சிரிப்பே... நம் ஆட்சியின் சிறப்பு” எனக் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

பேரனை ஏமாற்றி பாட்டியின் நகை திருட்டு; போலீசார் விசாரணை

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

cuddalore pennalur village grandson and grandmother gold chain issue 

 

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு - வடலூர் இடையே உள்ள பின்னலூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் அமிர்தவல்லி (வயது 50). இவர் தனது மகள் வழி பேரனுடன் தனித்து வசித்து வருகிறார். இந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று அமிர்தவல்லி வீட்டைப் பூட்டி சாவியை பேரனிடம் கொடுத்து பத்திரமாக வீட்டைப் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு வடலூரில் நடைபெற்ற வாரச் சந்தைக்கு காய்கறி வாங்கி வருவதற்காகச் சென்றுள்ளார்.

 

இதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் அமிர்தவல்லி வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரம் கழித்து அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த சிறுவனிடம், “உனது பாட்டி என்னிடம் பணம் கடன் வாங்கி இருந்தார். எனக்குக் கொடுக்க வேண்டிய அந்தப் பணம் வீட்டிலுள்ள பீரோவில் இருக்கிறது. அதைத் திறந்து எடுத்துக் கொள்ளுமாறு உன் பாட்டி என்னிடம் கூறிவிட்டு சந்தைக்குச் சென்றுள்ளார்” என்று மர்ம நபர் கூறியதை உண்மை என நம்பிய சிறுவன் வீட்டைத் திறந்ததோடு தன்னிடம் இருந்து பீரோ சாவியையும் கொடுத்துள்ளான்.

 

இதைப் பயன்படுத்திக் கொண்ட அந்த மர்ம நபர் பீரோவில் அமிர்தவல்லி வைத்திருந்த இருந்த மூன்று பவுன் நகையைத் திருடிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார். சந்தைக்குச் சென்ற அமிர்தவல்லி சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்துள்ளார். அவரிடம் ஒன்றும் அறியாத பேரன் நடந்த சம்பவங்களைக் கூறியுள்ளார். விவரமறியா சிறுவனை ஏமாற்றி நகையைத் திருடிச் சென்றதை அறிந்த அமிர்தவல்லி திருடனைக் கண்டுபிடிக்கக் கோரி சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

இது குறித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை ஏமாற்றி நகையைத் திருடிச் சென்ற திருடனைக் கண்டுபிடிப்பதற்காக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் மர்ம திருடன் உருவ அமைப்பு குறித்தும் சிறுவனிடம் விசாரித்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.