India will not accept humiliation says by Russian President slams US over trade issue
பிரேசிலில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற 17வது ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில், ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களைக் கண்டித்தும், வரி உயர்வு குறித்து அமெரிக்காவை மறைமுகமாக சாடும் வகையிலும் அறிக்கை வெளியிட்டது. இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கோபத்தை ஏற்படுத்தியது. மேலும், அமெரிக்க டாலருக்கு மாற்றாக சொந்தமாக பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்க வேண்டும் என்று பிரிக்ஸ் மாநாட்டில் எடுத்திருந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனிடையே, ரஷ்யாவுடன் இந்தியா கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்துள்ளதாகவும், இந்தியா மிக அதிகமான வரி விதிப்பதாகவும் கூறி இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 50% வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். இந்தியா பொருட்களுக்கு 50% வரி விதிப்பு அறிவிப்பு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதே சமயம், ரஷ்யாவிடம் இருந்து கச்சா இறக்குமதி வாங்குவதை நிறுத்த வேண்டும் என இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தது. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. எந்த காரணத்தை கொண்டும் ரஷ்யாவிடமிருந்து பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வதில் எந்த மாற்றமும் இருக்காது தேவைப்பட்டால் கூடுதலாக இறக்குமதி செய்வோம். இந்திய நாட்டு மக்களின் நலனை எங்களுக்கு பிரதானமானது என்று இந்தியா தனது நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டது. இதனிடையே, இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றது.
இந்த நிலையில், பிரிக்ஸ் அமைப்பை நிறுவ உதவிய இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நன்றி தெரிவித்துள்ளார். தெற்கு ரஷ்யாவில் இந்தியா உட்பட 140 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் நிபுணர்களின் சர்வதேச வால்டா கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், “ரஷ்யாவின் வர்த்தக கூட்டாளிகள் மீது அதிக வரிகள் விதிக்கப்பட்டால், அது உலகளாவிய எரிசக்தி விலைகளை உயர்த்தும். அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை அதிகமாக வைத்திருக்க கட்டாயப்படுத்தும். மேலும், அமெரிக்க பொருளாதாரத்தை குறைக்க வழிவகுக்கும்.
இந்தியாவுடன் எங்களுக்கு எந்தப் பிரச்சினையோ அல்லது மாநிலங்களுக்கு இடையேயான பதட்டங்களோ இருந்ததில்லை. ஒருபோதும் இல்லை. இந்தியா அவமானத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. பிரதமர் நரேந்திர மோடி ஒருபோதும் அத்தகைய நடவடிக்கையை எடுக்க மாட்டார். ரஷ்யாவிலிருந்து எரிசக்தி வாங்குவதை இந்தியா நிறுத்தினால், 9 பில்லியன் டாலர் முதல் 10 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா போன்ற ஒரு நாட்டின் மக்கள், என்னை நம்புங்கள். அரசியல் தலைமை எடுக்கும் முடிவுகளை உன்னிப்பாகக் கண்காணிப்போம், யாருக்கும் முன்பாக எந்த அவமானத்தையும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். பிரதமர் மோடியை எனக்குத் தெரியும், அவரே இதுபோன்ற எந்த நடவடிக்கையையும் ஒருபோதும் எடுக்க மாட்டார்.
அமெரிக்காவின் வரிகளால் இந்தியா எதிர்கொள்ளும் இழப்புகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியால் சமப்படுத்தப்படும். மேலும் அது ஒரு இறையாண்மை கொண்ட நாடாக கௌரவத்தைப் பெறும். வர்த்தக ஏற்றத்தாழ்வை நீக்க, ரஷ்யா இந்தியாவிலிருந்து அதிக விவசாய பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்கக்கூடும். இந்தியாவிலிருந்து அதிக விவசாய பொருட்கள் வாங்கப்படலாம். மருத்துவ பொருட்கள், மருந்துகளுக்கு எங்கள் தரப்பிலிருந்து சில நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். பிரிக்ஸ் அமைப்பை நிறுவ உதவிய இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு ரஷ்யா நன்றியுடன் உள்ளது” என்று கூறினார்.