India, US foreign ministers meet over H-1B visa row
அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி வேலை செய்ய எச்-1பி விசா பெற வேண்டும். இந்த விசாவை பெற்றவர்களின் குடும்பத்தினருக்கு எச்-4 விசா வழங்கப்படும். இதன் மூலம் எச்-1பி விசா பெற்றவர்களின் குடும்பத்தினரும் அமெரிக்காவில் வேலை செய்ய முடியும். கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்கா அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, எச்-4 விசா நடைமுறையில் வேலைவாய்ப்பு பெறுவதை ரத்து செய்தார். அதனை தொடர்ந்து அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், ட்ரம்பின் உத்தரவைத் திரும்பப் பெற்றார். இதன்மூலம் எச்-4 விசா பெற்றவர்கள் மீண்டும் அமெரிக்காவில் பணி செய்ய முடியும் என்ற நடைமுறை இருந்தது.
இந்த நிலையில், கடந்தாண்டு புதிய அதிபராக மீண்டும் பொறுப்பேற்ற டிரம்ப், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, ரஷ்யாவுடன் இந்தியா கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்துள்ளதாகவும், இந்தியா மிக அதிகமான வரி விதிப்பதாகவும் கூறி இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 50% வரியை டிரம்ப் அறிவித்தார். இந்த வரி விதிப்பு நடவடிக்கையால், நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதற்கிடையில், வரி விதிப்பு நடவடிக்கை குறித்து அமெரிக்கா - இந்தியா ஆகிய நாடுகள் பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்த சூழ்நிலையில், எச்-1பி விசா திட்டத்தை முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில், விசா விண்ணப்பங்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் (தோராயமாக 84 லட்சம் இந்திய ரூபாய்) கட்டணம் விதிக்கும் உத்தரவில் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதுகுறித்து பேசிய வெள்ளை மாளிகை ஊழியர் செயலாளர் வில் ஷார்ஃப், “எச்-1பி விசா திட்டம் தற்போது மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் விசாக்களில் ஒன்றாக உள்ளது. அமெரிக்கர்களால் செய்ய முடியாத பணிகளை செய்யக்கூடிய வெளிநாட்டினரை பணியமர்த்துவதற்காக மட்டுமே இந்த விசா பயன்படுத்தப்பட வேண்டும்” என்று கூறினார்.
வரி விதிப்பு, ஹெச்-1பி விசா உள்ளிட்ட விவகாரங்கள் பூதாகரமாக மாறியுள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சந்திப்பு பேசினார். நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபைக் கூட்டத்தின் (UNGA) ஒரு பகுதியாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ நேற்று (22-09-25) சந்தித்தார். வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, மருந்துகள் மற்றும் முக்கியமான கனிமங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இது குறித்து ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில், இருநாட்டு உறவுகள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்ததாகவும், முன்னுரிமை தர வேண்டிய விஷயங்கள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம் என இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டதாகவும் பதிவிட்டுள்ளார்.