வங்கதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து அந்நாட்டில் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இளைஞர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கொலையாளிகளை விரைவில் கண்டுபிடித்து கைது செய்யக்கோரி பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக ஒரு இந்திய இளைஞரும் தாக்குதலுக்குள்ளாகி கொல்லப்பட்ட சம்பவமும் பெரும் பரப்பை ஏற்படுத்தியது. பல இடங்களில் வன்முறை சம்பவங்களால் போக்குவரத்து மட்டுமல்லாமல் பொதுமக்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

Advertisment

அதனை தொடர்ந்து, ஹாடி கொலை வழக்கில் ஃபைசல் கரீம் மசூத் முக்கிய குற்றவாளி என புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டதை அடுத்து, அவர் நாட்டை விட்டு வெளியேற நேற்று (21-12-25) டாக்கா நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், மசூத் உடன் இருந்த கொலையாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மசூத் இன்னும் வங்கதேசத்திற்குள் தான் இருக்கிறார், ஆனால் காவல் துறையிடமிருந்து தப்பிப்பதற்காக அடிக்கடி இருப்பிடங்களை மாற்றி வருகிறார் என்று பாதுகாப்பு அமைப்புகள் தகவல் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது நடமாட்டத்தைக் கண்காணிக்க பல புலனாய்வுக் குழுக்கள் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

அண்டை நாடான வங்கதேசத்தில் அதிகரித்துள்ள பதற்றங்கள் மற்றும் இந்த வார தொடக்கத்தில் தலைநகர் டாக்காவில் உள்ள இந்திய உயர் தூதரகத்திற்கு அருகே நடந்த போராட்டத்திற்கு மத்தியில், வங்கதேசத்தின் சிட்டகாங்கில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையத்தில் (IVAC) விசா நடவடிக்கைகள் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக இந்தியா அதிரடியாக அறிவித்துள்ளது. இளைஞர் அமைப்புத் தலைவர் உஸ்மான் ஹாடி கொல்லப்பட்டதைத் அடுத்து நடைபெற்று வரும் கலவரத்தின் போது இந்திய தூதரக அலுவலகங்கள் தாக்கப்பட்டது. இதற்கிடையில், வங்கதேச மக்களுக்கு விசா வழங்குவதை காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளதாகத் மத்திய அரசு அறிவித்துள்ளது.