ஆப்கானிஸ்தானில் நேற்று (01.09.2025) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகருக்கு அருகே, ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவான முதல் நிலநடுக்கம் தாக்கியது. இதைத் தொடர்ந்து 4.7 அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கங்கள் கிழக்கு ஆப்கானிஸ்தானின் குனார் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களில் உள்ள நூர் குல், சோகி, வாட்பூர், மனோகி மற்றும் சபா தாரா மாவட்டங்களை கடுமையாகப் பாதித்துள்ளன. இடிந்த கட்டடங்களால் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 2,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தலிபான் அரசு தெரிவித்துள்ளது. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன
நிலநடுக்கத்தால் பல இடங்களில் கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் பீதியடைந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர். இடிந்த வீடுகள் மற்றும் கட்டடங்களின் காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில், “ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வாழ்த்துகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியா அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளது,” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்தியா, மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு 1,000 குடும்ப கூடாரங்கள், 15 டன் உணவுப் பொருள்கள், உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை நிவாரண உதவியாக அனுப்பியுள்ளது. மேலும், தேவையான உதவிகளைத் தொடர்ந்து வழங்க இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதியளித்துள்ளது.