வெனிசுலா தலைநகர் கராகஸ் நகரின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்க ராணுவம் நேற்று அதிகாலை 2 மணியளவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், வெனிசுலா நாட்டின் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அரங்கேறி கட்டிடங்கள் தீப்பிடித்து சேதமடைந்துள்ளது. குறிப்பாக லாகார்லோட்டா விமான நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 40 வெனிசுலா மக்கள் இறந்துள்ளதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால் வெனிசுலா நாட்டு மக்கள் பீதியடைந்துள்ளனர்
இதையடுத்து, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க சிறைப்பிடித்து நாடு கடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். கைது செய்யப்பட்ட வெனிசுலா அதிபர் மதுரோ படத்தை வெளியிட்டு வெனிசுலாவில் இனிமேல் எங்கள் ஆட்சி தான் என டிரம்ப் அதிரடியாக தெரிவித்தார். இது குறித்து டிரம்ப் தெரிவித்ததாவது, “புதிய அரசு வெனிசுலாவை ஆளும் வரை, அமெரிக்காவே அந்த நாட்டை நிர்வகிக்கும். அங்கு எண்ணெய் உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்துவோம். வெனிசுலாவின் எண்ணெய் துறையில் அமெரிக்கா வலுவான வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும்” என்று தெரிவித்தார்.
வெனிசுலாவுக்குள் அத்துமீறி நுழைந்து அந்நாட்டு அதிபர் மதுரோவை கைது செய்து அந்நாட்டை அமெரிக்காவே தற்காலிகமாக நிர்வகிக்கும் என்றும் டிரம்ப் கூறியிருந்த நிலையில், வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் (56) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டிருப்பது கவலை அளிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, ‘வெனிசுலாவில் சமீபத்திய நிகழ்வுகள் ஆழ்ந்த கவலைக்குரியவை. வளர்ந்து வரும் நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.
வெனிசுலா மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் பிரச்சினைகளைத் தீர்க்க சம்பந்தப்பட்ட அனைவரையும் நாங்கள் அழைக்கிறோம். கராகஸில் உள்ள இந்திய தூதரகம் இந்திய சமூக உறுப்பினர்களுடன் தொடர்பில் உள்ளது மற்றும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கும்’ எனத் தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/04/venemodi-2026-01-04-15-48-01.jpg)