ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நேற்று (23-09-25) ஜெனிவாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இந்திய தூதர் க்ஷிதிஜ் தியாகி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். இதில் பேசிய க்ஷிதிஜ் தியாகி, பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார்.

Advertisment

அதாவது அதில் அவர் கூறியதாவது, “இந்தியாவிற்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி இந்த மன்றத்தை பாகிஸ்தான் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்கிறது. எங்களது பிரதேசத்தை விரும்புவதற்குப் பதிலாக, சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள இந்திய பிரதேசத்தை விட்டு வெளியேறி தங்களது பொருளாதாரத்தை மீட்பதில் கவனம் செலுத்துவது நல்லது.  இராணுவ ஆதிக்கத்தால் முடக்கப்பட்ட அரசியலமைப்பை சீரமைக்கவும், மனித உரிமை மீறல்களால் கறை படிந்த உங்களது நிலையையும் சரி செய்ய வேண்டும். ஒருவேளை, பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதில் இருந்தும், ஐ.நா. தடைசெய்த பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதில் இருந்தும், தங்கள் சொந்த மக்கள் மீது குண்டுவீசுவதில் இருந்தும் ஓய்வு கிடைத்தால் இதை செய்யலாம்” என்று கூறினார்.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள மாட்ரே தாரா கிராமத்தில் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான் தனது சொந்த மக்கள் மீது குண்டு வீசுகிறது என்ற விமர்சனத்தை இந்திய தூதர் க்ஷிதிஜ் தியாகி வைத்துள்ளார்.