பீகார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் -பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பிற கட்சிகள் உள்ளன. இம்மாநிலத்தில் இந்தாண்டு இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த தேர்தலுக்காக, அரசியல் கட்சித் தலைவர்கள் தற்போதில் இருந்தே ஆயுத்தமாகி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இந்த திருத்தத்தின்படி, 2003ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத அனைவரும் தங்கள் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகியவற்றுக்கான சான்றுகளை அளிக்க வேண்டும் எனவும், இவர்களில் 1981 ஜூலை 1க்குப் பிறகு பிறந்தவர்கள் தங்களுடைய பெற்றோரின் பிறப்பிடம் சார்ந்த சான்றுகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால், 20% புலம்பெயர்ந்த வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும், இதனால் பலரும் பாதிக்கப்படுவார்கள் என்றும் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 20 தலைவர்கள் கடந்த ஜூலை 2ஆம் தேதி தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியுள்ளனர். அதில், சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில் மேற்கொள்ளப்படும் இந்த திருத்தத்தால், பீகாரில் 2 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை இழக்க நேரிடும் என்று இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூறியதாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு 2 மணி நேரத்திற்கு மேலாக நடந்ததாகக் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம், அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விளக்கம் அளித்தது. இருப்பினும், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து இந்தியா கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கைக்கு எதிராக ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் பிற மகா கூட்டணிக் கட்சிகள் இன்று வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். சோன்பூர் மற்றும் ஹாஜிபூரில் உள்ள சாலைகளை இடை மறித்தும் டயர்களையும் எரித்தும், ஜெகனாபாத்தில் ரயில் பாதைகளை மறித்தும் உள்ளூர் தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கைகோர்த்து, தேர்தல் ஆணையம் கொண்டு வந்த சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்த்து பீகாரில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடக்கும் அதே வேளையில், அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் 2026 இல் நடைபெற உள்ளன. பீகாரில் தொடங்கி அடுத்தடுத்து நடைபெறும் மற்ற மாநிலத் தேர்தல்களில் சிறப்பு திருத்தம் மூலம் வாக்காளர் பட்டியலை தீவிரமாக மதிப்பாய்வு செய்து, புலம்பெயர்ந்தவர்களை அவர்களின் பிறந்த இடத்தை சரிபார்த்து அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளப்போவதாகக் கூறப்படுகிறது.