நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் கடந்த ஜூலை 21ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல், பீகார் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதில், கடந்த ஜூலை 28ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடத்தப்பட்டது.

இதற்கிடையில், பீகாரில் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் முதல் கட்டமாக மொத்தம் 65.2 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. நீக்கப்பட்ட வாக்காளர்களில் 22 லட்சம் பேர் இறந்துவிட்டதாகவும், 35 லட்சம் பேர் நிரந்தமாக வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டதாகவும், 7 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 1.2 லட்சம் பேர் இன்னும் தங்கள் படிவங்களை சமர்பிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டமும் நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் நேற்று (06-08-25) கடல் வழியாக பொருட்களை எடுத்துச் செல்வதற்கான மசோதா, வணிகக் கப்பல் மசோதா ஆகிய இரண்டு முக்கிய கடல்சார் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், 14 மாதங்களில் முதல் முறையாக காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் டெல்லியில் உள்ள வீட்டில் நடக்கவிருக்கும் இரவு உணவுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக ராகுல் காந்தியும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவும் இந்தியா கூட்டணியை மேம்படுத்துவதற்காக கூட்டணிக் கட்சிகளுடன் பல விவாதங்களை நடத்தி வந்தனர். இரவு உணவுக் கூட்டத்தைத் தொடர்ந்து, நாளை (08-08-25) இந்தியா கூட்டணிக் கட்சிகள் நாடாளுமன்றத்திற்கு வெளியே கூடி, தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். அதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகம் வரை கூட்டாக பேரணி நடத்தவுள்ளனர்.

Advertisment

கடந்த மக்களவை தேர்தலில், பா.ஜ.கவை வீழ்த்துவதற்காக கடந்த 2023 ஆண்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியை உருவாக்கின. இந்த இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேசிய மாநாட்டு கட்சி (என்.சி), மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி), சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. பல கட்டங்களாக கூட்டங்கள் நடத்தி இந்தியா கூட்டணி, மக்களவைத் தேர்தலை சந்தித்தது. ஆனால், அந்த தேர்தலில் இந்தியா கூட்டணி தோல்வியைச் சந்தித்தது. இதனையடுத்து நடைபெற்ற மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி சட்டமன்றத் தேர்தல்களில் இந்தியா கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது. இந்த தொடர் தோல்விகள், அந்த கூட்டணி தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்தியா கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் ஒற்றுமை இல்லாமல் இருப்பதே தொடர் தோல்விக்கு காரணம் என அரசியல் நோக்கர்கள் மட்டுமல்லாமல் கூட்டணி தலைவர்களே அதிருப்தி தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.