பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 22ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதையடுத்து, அம்மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 14ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பீகாரில், ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி, தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம்-காங்கிரஸ் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி, தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இது தவிர, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி மற்றும் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் ஆகியோர் தனித்து கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதனால், பீகார் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது.
இதனிடையே எதிர்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணியில் நடைபெற்று வரும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருவதால் வேட்பாளர் பட்டியலை அறிவிக்க தாமதம் ஏற்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது. அதனை தொடர்ந்து, இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று (20-10-25) நிறைவுபெறுவதை அடுத்து இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை ராஷ்டிரிய ஜனதா தளம் நேற்று வெளியிட்டது. கடந்த 17ஆம் தேதி காங்கிரஸ் கட்சி தனது இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி 123 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்த தேர்தலில், லாலு பிரசாத் யாதவின் மகனும், எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் ரகோபூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகள் பல தொகுதிகளில் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடுகின்றனர். கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீட்டில் தீர்வு எட்டப்படாததால் கூட்டணி வேட்பாளர்கள் பல தொகுதிகளில் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடுகின்றனர். அதன்படி, 5 தொகுதிகளில் காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் வேட்பாளர்களும், 2 தொகுதிகளில் காங்கிரஸ் - விகாஷீல் இன்சான் கட்சி வேட்பாளர்களும், ஒரு தொகுதியில் காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களும் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடுகின்றனர்.
முன்னதாக தொகுதி பங்கீட்டில் தீர்வு எட்டபடாததால் மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்து பிரிந்து தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.