நாட்டின் 79வது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று (15.08.2025) நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சுதந்திர தின உரையாற்றினார். அதன் தொடர்ச்சியாக பல்வேறு விருதுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
அந்த வகையில் தகைசால் தமிழர் விருது கே.எம். காதர் மொஹதீனுக்கு வழங்கப்பட்டது. அதோடு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டு சான்றும் அவருக்கு வழங்கப்பட்டது. டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் வா. நாராயணனுக்கு வழங்கப்பட்டது. துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவலா விருது காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு வழங்கப்பட்டது. முதலமைச்சரின் நல் ஆளுமை விருது ஊரக மேம்பாட்டு முயற்சிகள் மேற்கொண்டதற்காக உதவி காவல் கண்காணிப்பாளர் வி. பிரசன்ன குமார், வட்டாட்சியர் பி. பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் வி. யமுனா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.
அதே போன்று சுய சான்றிதழ் திட்டத்தின் மூலம் வீடு கட்டட வரைபட அனுமதி பெறும் முறைகளை எளிதாக்கியதற்காகக் கூடுதல் தலைமைச் செயலாளர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை காகர்லா உஷாவிற்கும், நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குநர் பி. கணேசனுக்கும் முதலமைச்சரின் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியமைக்காக லட்சுமி பிரியா, ஆனந்த், அண்ணாதுரை கந்தசாமி ஆகியோருக்கும் முதலமைச்சரின் நல் ஆளுமைக்கான விருது வழங்கப்பட்டது. திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழை பாலத்தை அமைத்ததற்காக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் அரசு செயலாளர் ரா. செல்வராஜ் மற்றும் அவரது குழுவினருக்கு முதலமைச்சரின் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது.
தமிழ் மொழியை உலகளவில் மேம்படுத்தியதற்காகத் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநராக பொறுப்பு வகித்து வரும் இணை இயக்குநர் ஆர். கோமகனுக்கு முதலமைச்சரின் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகளில் சிறந்த மருத்துவருக்கான விருது திருச்சியைச் சேர்ந்த குமரவேல் சண்முகசுந்தரத்திற்கு வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்காகச் சிறப்பாகச் செயல்படும் சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான விருது காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு வழங்கப்பட்டது. உலக கேரம் சாம்பியன் காசிமாவிற்கும், பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கும் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.