கீழணையில் இருந்து கொள்ளிடத்தில் வினாடிக்கு 52 ஆயிரத்து 717 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 20ம் தேதி அன்று அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. மேலும் அணைக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் அணைக்கு வரும் உபரி நீர் காவிரி ஆற்றில் வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து உபரி தண்ணீர் வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலணையில் வியாழக்கிழமை வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இந்த தண்ணீயுடன் மழை தண்ணீரும் சேர்ந்து கீழணைக்கு வினாடிக்கு 52 ஆயிரத்து 717 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் அப்படியே 9 அடி நீர்மட்டம் உள்ள கீழணையில் இருந்து கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது. இது கடலில் சென்று கலக்கிறது. மேலும் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் வடவாற்றில் வினாடிக்கு 527 கனஅடி தண்ணீரும், வடக்கு ராஜன் வாய்க்காலுக்கு வினாடிக்கு 96 கனஅடி தண்ணீரும், தெற்கு ராஜன் வாய்க்காலுக்கு வினாடிக்கு 107 கன அடி தண்ணீரும், குமிக்கி மண்ணியாற்றில் வினாடிக்கு 58 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
47.50 அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் 45.50 அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு வடவாறு வழியாக வினாடிக்கு 650 கன அடி தண்ணீரும், காட்டாறுகள் மூலம் வினாடிக்கு 250 கனமழை தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. சென்னைக்கு ஏரியில் இருந்து விநாடிக்கு 73 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மேலும் ஏரியின் வடிகால் மதகான விஎன்எஸ்எஸ் வழியாக வினாடிக்கு 1000 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கீழணைக்கு வரும் நீர் வரத்திற்கேற்ப கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கப்படும் எனவே கொள்ளிடம் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், தண்ணீரில் இறங்கக்கூடாது என்று கீழணை நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் கொளஞ்சிநாதன் தெரிவித்துள்ளார். கடந்த 21ம் தேதி மாலை கீழணையில் இருந்து கொள்ளிடத்தில் வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. இது படி படிப்படியாக உயர்ந்து வியாழக்கிழமை வினாடிக்கு 52 ஆயிரத்து 717 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.