விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஏராளமான பட்டாசு தயாரிப்பு ஆலைகள் அமைந்துள்ளன. இங்குப் பல்லாயிரக்கணக்கானோர் தொழிலாளர்களாக இந்த ஆலைகளில் பணியாற்றி வருகின்றனர். அதன்படி சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான வருவாய் சிவகாசி பகுதியில் இருந்து கிடைக்கிறது.
இந்நிலையில் பட்டாசு ஆலைகளில் வரி ஏய்ப்பு நடைபெற்றதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் (11.08.2025) முதல் சிவகாசியில் உள்ள பிரபலமான இரு பட்டாசு தொழிற்சாலை நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள், சம்பந்தப்பட்ட பட்டாசு தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள், பங்குதாரர்களின் வீடுகள், 4 சீட் நிறுவனங்களில் ஆண், பெண் அலுவலர் என 100 பேர் கொண்ட குழுவினர் 20 வாகனங்களில் வந்து ஒரே நேரத்தில் திடீரென சோதனை நடத்தினர்.
அந்த வகையில் நேற்று முன் தினம், நேற்று (12.08.2024) என 2 நாட்கள் இந்த சோதனை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக 3வது நாளாக இன்றும் (13.08.2025) தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் போது பட்டாசு ஆலைகள் வரி ஏய்ப்பு செய்தது சம்பந்தமாக பல்வேறு ஆவணங்கள் கட்டுக்கட்டாக சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.