இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த நவாஸ்கனி என்பவர் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போதும், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, வருமானத்தை மறைத்து வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளார் என்று புகார் எழுந்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதே போல் அவர், வேட்புமனுக்களில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் அடிப்படையில் நவாஸ்கனி 23 கோடியே 58 லட்ச ரூபாய் சொத்து சேர்த்துள்ளார், எனவே இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சிபிஐக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வழக்குத் தொடர்ந்தார்.

Advertisment

அந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி அமர்வு முன்பு வந்தது. அப்போது வருமான வரித்துறை சார்பில், ‘மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தங்கள் வசம் உள்ள ஆதாரத்தின் அடிப்படையில் சட்டப்படி நவாஸ்கனி மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ‘சொத்து விவரம் குறித்து சிபிஐ டிஎஸ்பி நடத்திய ஆய்வில் நவாஸ்கனி தன்னுடைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கியுள்ளார். எனவே 2024ஆம் ஆண்டு அந்த வேட்புமனுவில் கூடுதல் சொத்து விவரங்களை காட்டியுள்ளார். எனவே மனுதாரர் கூறியது போல, நவாஸ்கனி 288% அதிகமாக சொத்து சேர்க்கவில்லை. 2.87% மட்டுமே அதிகமாக சேர்த்து தெரிவிக்கப்பட்டது. எனவே இந்த புகாரை பொறுத்தவரை எந்தவொரு முகாந்திரமும் இல்லை’ என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக நவாஸ்கனி பதிலளிக்க வேண்டும் என இந்த வழக்கை இரண்டு வாரத்திற்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.