ஆந்திர மாநிலம், ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் டிசம்பர் 21 அன்று முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ஆர்.ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாள் கட்சித்தொண்டர்களால் பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வெடி வெடிக்கும் நிகழ்ச்சியும் இடம் பெற்றிருந்தது. அப்போது தொண்டர்கள் கூட்டமாக இருந்த இடத்தில் அஜய் தேவா மற்றும் அஞ்சினப்பா ஆகியோர் பட்டாசு வெடிக்க முயற்சித்தனர். அப்போது அங்கிருந்த சந்தியா ராணி எனும் கர்ப்பிணிப் பெண் கூட்டத்திலிருந்து தூரமாகச் சென்று பட்டாசு வெடிக்குமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அஜய் தேவா மற்றும் அஞ்சினப்பா ஆகியோர் சந்தியாவின் கழுத்தை நெரித்து வயிற்றில் எட்டி உதைத்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த சம்பவம் பொது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளி அஜய் தேவாவை கைது செய்து  ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள கடிரி நகரில் ஆர்.டி.சி பேருந்து நிலைய வட்டத்திலிருந்து கிராமப்புற காவல் நிலையம் வரை பொதுமக்கள் முன்னிலையில் காவல்துறை ஊர்வலமாக அழைத்துச் சென்றது. இந்தச் சம்பவத்தில் தீவிரமாக நடவடிக்கை எடுத்துவரும் காவல்துறை, அஜய் தேவாவைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தது. தற்போது தலைமறைவாக உள்ள இரண்டாவது குற்றவாளியான அஞ்சினப்பாவை காவல்துறை தீவிரமாகத் தேடிவருகிறது.

Advertisment

பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்கள் குறித்து ஒய்.எஸ்.ஆர்.சி.பி கவலை தெரிவித்துள்ளது. ஒய்.எஸ்.ஆர்.சி.பி மகளிர் அணி மாநிலச் செயல் தலைவர் காகனி பூஜிதா பேசுகையில், மோசமடைந்து வரும் சட்டம்-ஒழுங்கு நிலைமைக்காக கூட்டணி அரசாங்கத்தைக் கடுமையாக சாடியுள்ளார். டிசம்பர் 22 அன்று நெல்லூரில் உள்ள ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,“மாநிலம் முழுவதும் பெண்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு பகுதியிலும் தினமும் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

siren-arrested

கடந்த 18 மாத கூட்டணி ஆட்சியில் பொதுப் பாதுகாப்பு முற்றிலும் சீர்குலைந்து விட்டன. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஆந்திரப் பிரதேசம் தற்போது இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இது அரசாங்கத்தின் ஒரு வெட்கக்கேடான 'சாதனை' ஆகும். குடிமக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்காக அரசாங்கம் காவல்துறையைத் தவறாகப் பயன்படுத்துகிறது. முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி ஆட்சியின் கீழ் ஆந்திரப் பிரதேசம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறிவிட்டது” என்று தெரிவித்துள்ளார். 

Advertisment