சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழக போலீஸ் டிஜிபி தலைமை அலுவலகத்திற்கு இன்று (04.10.2025) இ - மெயில் ஒன்று வந்துள்ளது. அதில், “மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் கோயில், திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தர்கா போன்ற இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இது குறித்து உடனடியாக வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிபுணர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்களும் சோதனை மேற்கொண்டனர். அதாவது மீனாட்சி அம்மன் கோவில் சன்னதி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான அன்னதானம் வழங்கக்கூடிய இடம் , தெப்பக்குளம், கோவிலின் 4 கோபுரப் பகுதிகள், பக்தர்களின் காலணிகள் வைக்கக்கூடிய இடங்கள் என பல்வேறு இடங்களிலும் சுமார் 3 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். அதே போன்று திருப்பரங்குன்றம் கோவில், அங்குள்ள பெரிய வீதி, சிக்கந்தர் பாதுஷா தர்கா எனப் பல்வேறு இடங்களிலும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதில் எவ்வித வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்க முடியாததால் இந்த மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது.
மற்றொருபுறம் இந்த மிரட்டல் விடுத்த நபர் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் மதுரை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகை, பா.ஜ.க தலைமை அலுவலகம், நடிகை திரிஷா, நடிகர் எஸ்.வி. சேகர் உள்ளிட்டோர் இல்லத்திற்கும், சென்னையில் உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இலங்கை தூதரகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.