சென்னை ராயப்பேட்டையில் பிரபல வணிக வளாகம் அமைந்துள்ளது. இத்தகைய சூழலில் தான் யாரும் எதிர்பாராத விதமாக இன்று (21.11.2025) காலை 08:40 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மேலும், இந்த தீயானது வணிக வளாகத்தில் உள்ள பிற பகுதியிலும் பரவியதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இதனைக் கண்டு வணிக வளாகத்தின் உள்ளே இருந்த ஊழியர்கள் அனைவரும் கூச்சலிட்டபடி வெளியேறினர். இதனையடுத்து இந்த தீ விபத்து சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவல்லிக்கேணி, எழும்பூர் மற்றும் மயிலாப்பூர் என 3 தீயணைப்பு நிலையங்களிலிருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மற்றொருபுறம் இந்த தீ விபத்து தொடர்பாக அண்ணாசாலை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வணிக வளாகத்தின் முதல் தளத்தில் இயங்கி வந்த மின் மாற்றி அறையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் வணிக வளாகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பொதுமக்கள் அனைவரும் மறு உத்தரவு வரும்வரை உள்ளே செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதோடு வணிக வளாகத்தின் 4 வாயில்களும் அடைக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசாரின் முழு விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் எனக் கூறப்படுகிறது. இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/21/che-ea-2025-11-21-12-28-45.jpg)