கோவா மாநிலத்தில் உள்ள வடகோவாவின் அர்போரா பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பிரபல இரவு பொழுதுபோக்கு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்த விடுதியில் நேற்று (06.12.2025) இரவு எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விடுதியில் இருந்த 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாகக் கோவா மாநில டிஜிபி அலோக் குமார் கூறுகையில், “ஆர்போராவில் உள்ள பொழுதுபோக்கு விடுதி ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவு 12.04 மணிக்கு (07.12.2025) இந்த தீ விபத்து குறித்துக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து உடனடியாக போலீஸ், தீயணைப்புப் படை மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன. அதனைத் தொடர்ந்து தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்திற்கான காரணம் குறித்து காவல்துறை விசாரிக்கும். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/07/goa-cm-ins-2025-12-07-07-34-26.jpg)
மேலும் சம்பவ இடத்திற்குக் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆர்போராவில் நடந்த துயரமான தீ விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி என்னுடன் பேசினார். மேலும் களத்தில் நிலவும் தற்போதைய நிலவரம் குறித்து நான் அவரிடம் விளக்கினேன். இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கோவா அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us