பீகார் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 22 ஆம் தேதியுடன் முடிவடைவதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பீகாரில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி, தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஆகியவை களத்தில் உள்ளன. 

Advertisment

இந்த நிலையில் முதற்கட்டமாக மாநிலத்தில் உள்ள 121  தொகுதிகளுக்கு நவம்பர் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பீகார் துணை முதல்வரும் பா.ஜ.க தலைவருமான விஜய் குமார் சின்ஹா போட்டியிடும் லகிசராய் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. தொகுதியில் தனது வாக்கைப் பதிவு செய்த அவர், அந்தத் தொகுதியில் உள்ள மற்ற வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவைப் பார்வையிட்டு வந்தார்.

Advertisment

அந்த வகையில் லகிசராய் தொகுதிக்குட்பட்ட கோரியாரி கிராமத்துக்கு வாக்குப்பதிவைப் பார்வையிடுவதற்காக விஜய் குமார் சின்ஹா சென்றுள்ளார். அப்போது, அவரை ஊருக்குள் நுழைய விடாத கிராம மக்கள் அவரது கான்வாய் வாகனத்தின் மீது செருப்பு, கற்கள், மாட்டுச் சாணம் உள்ளிட்டவற்றை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் விஜய் குமார் சின்ஹாவுக்கு எதிராகக் கோஷங்களையும் எழுப்பினர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த பாதுகாப்புப் படையினர், விஜய் குமார் சின்ஹாவை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு போன் செய்த விஜய் குமார் சின்ஹா, “நான் இப்போ கிராமத்தில் இருக்கேன். உடனே சிறப்புப் படையை அனுப்புங்கள்! இங்கேயே உட்கார்ந்து நான் போராட்டத்தில் ஈடுபடப் போகிறேன்” எனத் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “துணை முதலமைச்சரையே உள்ளே விட மாட்டேங்கறாங்க. கற்களும் மாட்டுச் சாணியும் வீசியிருக்காங்க. இவங்க ஆர்.ஜே.டி குண்டர்கள்! ஆட்சிக்கு வராமலேயே இப்படி அட்டூழியம் செய்கிறார்கள். என் வாக்குச்சாவடி முகவரை மிரட்டி, காலை 6:30 மணிக்கே திருப்பி அனுப்பிவிட்டார்கள். வாக்காளர்களை வெளியே வர விடுவதில்லை” என்றார். 

Advertisment

பீகாரில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவுள் நடந்து வரும் நிலையில், துணை முதல்வர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.