புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் வட்டாரத்தில் அமைந்துள்ள கீழ ஏம்பல் என்ற பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயின்று வரும், நாடோடி பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 3ஆம் வகுப்பு மாணவரை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனால் மாணவருக்குக் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து மாணவர் சிகிச்சைக்காக மணல்மேடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பள்ளி மாணவரைத் தலைமை ஆசிரியர் ஒருவர் தாக்கிய சம்பவம் சக மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில் தான் இந்த தாக்குதல் சம்பவத்திற்குக் காரணமான தலைமை ஆசிரியர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே சமயம் தனது மகன் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் அவரது பெற்றோர் முறையிடச் சென்றனர். அப்போது அவர்களை அவதூறாகப் பேசியதாகவும், தாக்கியதாகவும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.