புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பல்லவராயன்பத்தை கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (வயது 52). விவசாயியான இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். மகன்கள் கோவை மற்றும் திருப்பூரில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர். மணியும் அவர் மனைவியும் மட்டுமே ஊரில் உள்ளனர்.
இத்தகைய சூழலில் தான் சமீபத்தில் பாரதப்பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இவர்களுக்கு வீடு கிடைத்துள்ளது. அரசு வீட்டைக் கூடுதலாகப் பணம் செலவு செய்து சற்று பெரிய வீடாகக் கட்டலாம் என்பதால் தனது நிலப் பத்திரங்களை வங்கியில் அடமானம் வைத்து ரூ.7 லட்சம் கடன் வாங்கி உள்ளார் விவசாயி மணி. அந்தப் பணத்தில் ரூ.2 லட்சம் மற்ற வேலைகளுக்குச் செலவான நிலையில் மீதியுள்ள ரூ.5 லட்சத்தை ஒரு துண்டில் சுற்றி தனது பீரோவில் வைத்துள்ளார். இன்று (22.01.2026 - வியாழக்கிழமை) உறவினர் வீட்டு விசேஷத்திற்கு மணியும் அவரது மனைவியும் சென்று திரும்பி வந்து வீட்டைத் திறந்து பார்த்தனர்.
அப்போது அதிர்ச்சியடைந்துள்ளனர். பணம் மற்றும் பத்திரங்கள், குடும்பத்தினரின் ஆதார் அட்டைகள், குடும்ப அட்டை, மகன்களின் சான்றிதழ்கள் அனைத்தும் பீரோவோடு சேர்ந்து எரிந்து நாசமாகிக் கிடந்தது. இதனைப் பார்த்து கணவன், மனைவி கண்ணீர் விட்டுக் கதறினர். வீடு கட்ட கடன் வாங்கி வைத்திருந்த பணம், சான்றிதழ்கள் அனைத்தும் எரிந்து போனதே என்று கதறினர். இதனால் அந்தப் பகுதியே சோகத்தில் ஆழ்ந்தது. மேலும், மின் கசிவு காரணமாக தீ பற்றி இருக்குமா அல்லது வேறு ஏதும் காரணமா என்று கறம்பக்குடி போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/22/pdu-cash-2026-01-22-23-13-34.jpg)