கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள தொளார்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர் திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலும் மாலை அணிந்து பாத யாத்திரையாக நேற்று முன்தினம் புறப்பட்டனர். அவர்களுடன்  சேலம் மாவட்டம் கெங்கவல்லியைச் சேர்ந்த பக்தர்களும் பாதயாத்திரை சென்று கொண்டிருந்தனர். 

Advertisment

இத்தகைய சூழலில் தான் பக்தர்கள் இன்று அதிகாலை 5 மணி அளவில் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே சென்னை - திருச்சி இடையேயான சாலையில்  சமயபுரம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாகச் சென்ற ஒரு கார் ஒன்று நடந்து சென்ற பக்தர்கள் கூட்டத்தின்  உள்ளே புகுந்து பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தொளார்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி, சசிகலா மலர்கொடி மற்றும் கெங்கவல்லியைச் சேர்ந்த சித்திரா என 4 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.   

Advertisment

மேலும் ஜோதிலட்சுமி என்ற பக்தர் சிகிச்சைக்காகப் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்திற்குக் காரணமான கார் ஓட்டுநர் சென்னையை அடுத்துள்ள திரிசூலம் ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த கௌதம் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாத யாத்திரை சென்ற பெண்கள் மீது கார் மோதிய விபத்தில் 4 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.