மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் கல்யாண் (கிழக்கு) பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி வேலை நிமித்தமாக வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தார். அன்று இரவு வீட்டில் உள்ள தனது மகளைத் தொலைப்பேசியில் அழைத்தார். ஆனால் மகள் பதிலளிக்கவில்லை. மீண்டும், தொடர்ச்சியாக நீண்ட நேரமாகத் தனது மகளை அழைத்தும், மகளிடமிருந்து எந்த பதிலுமில்லை. எனவே அண்டை வீட்டாரிடம், தனது மகள் தொலைப்பேசியில் அழைத்ததற்கு எந்த பதிலும் அளிக்க வில்லை. அதனால் வீட்டிற்குச் சென்று பார்க்கும்படி கூறியதையடுத்து, அவரும் அந்த வீட்டிற்குச் சென்று பார்த்தார். அங்குச் சென்று பார்த்த அவர் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்.  

Advertisment

அங்கு, அந்த பெண் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதையடுத்து, உடனடியாக ருக்மிணிபாய் மருத்துவமனைக்கு அப்பெண் கொண்டு செல்லப்பட்டார், ஆனால், அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து கோல்சேவாடி காவல்நிலையத்தில் பெண்ணின் தாயார் புகாரளித்தார். இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விசாரணையில், உயிரிழந்த அப்பெண்ணிற்கு 21 வயது என்பதும், அவர் விமானப்பணிப் பெண்ணாக பணியாற்றியதாகவும் தெரியவருகிறது. மேலும், 23 வயதான இளைஞர் ஒருவரை 2020ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளார். காதலனுக்குத் தேவை ஏற்படும் போதெல்லாம் பணம் கொடுத்துள்ளார். 

Advertisment

இப்படியாக லட்சக்கணக்கில், காதலன் இப்பெண்ணிடம் பணம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. நீண்ட நாட்களாக இவர்கள் காதலித்து வந்த நிலையில், தற்போது அந்த இளைஞர்  வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும், அதனால் இப்பெண்ணைத் திருமணம் செய்ய மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்துக் கேட்டதற்கு இப்பெண்ணைத் திட்டியதோடு, அவரது புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாகவும் கூறி மிரட்டியுள்ளார். அதோடு, இப்பெண்ணை அந்த இளைஞர் அடிக்கடி தாக்கியுள்ளதாகவும், அதனால் இப்பெண்ணின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அப்பெண் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரியவந்துள்ளது. 

arrest

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ஜனவரி 10 ஆம் தேதி சம்பந்தப்பட்ட இளைஞர் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவு 108 (தற்கொலைக்குத் தூண்டுதல்) கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக அப்பெண்ணின் செல்போன் உரையாடல் மற்றும் வங்கிக் கணக்குகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisment