ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவி அளித்த புகாரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு வருவதாகக் கூறப்படுகிறது. அவர் ஹாக்கி விளையாட்டு வீராங்கனை ஆவார். இந்த நிலையில், அவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கோல் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், “நான் ஹாக்கி விளையாடி வருகிறேன்.
எனக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக நன்கு தெரிந்த ஜூனியர் பயிற்சியாளர் ஒருவர், நான் பயிற்சி பெற்று வந்த அதே மைதானத்தின் கழிவறையில் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு, என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்" எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமானதாகவும், கடந்த ஜனவரி 5 ஆம் தேதி கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் குற்றத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்யக்கோரி வலியுறுத்தியுள்ளனர்.
புகாரைத் தொடர்ந்து, "பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (POCSO) மற்றும் சட்டத்தின் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, குற்றவாளியை நாங்கள் கைது செய்துள்ளோம். அவரை நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, இரண்டு நாட்கள் விசாரணைக் காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம்”என்று ரேவாரி காவல்துறை தெரிவித்துள்ளது.
Follow Us