அரியலூர் மாவட்டம் வாரணவாசி என்ற பகுதியில் பிள்ளையார் கோவில் வளைவு அமைந்துள்ளது. இங்குள்ள, தஞ்சாவூர் - சென்னை இடையேயான சாலையில் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று இன்று (11.11.2025) காலை சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லாரியில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக லாரி முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. அதன் பின்னர் லாரியில் இருந்த 50க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்துச் சிதற ஆரம்பித்துள்ளது. 

Advertisment

அச்சமயத்தில் அந்த வழியாகச் சாலையில் சென்றவர்கள் உடனடியாக இது குறித்து கீழப்பழுவூர் மற்றும் அரியலூர் காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். இருப்பினும் அதற்குள் லாரி முழுவதுமாக  தீப்பற்றி எரிந்து சாம்பலானது. இதனால் அந்தப் பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. அதாவது பல கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பாலும் சிலிண்டர் வெடிக்கும் சத்தம் கேட்ட வண்ணம் இருந்துள்ளது.

Advertisment

மேலும் சிலிண்டர்கள் வெடித்து பல்வேறு இடங்களில் சிதறி தூக்கி வீசப்பட்டது. இதன் காரணமாக சிலிண்டர் ஏற்றி வந்த லாரி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. அதே சமயம் இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலிண்டர் ஏற்றி வந்த இந்த லாரி எங்கிருந்து வந்தது?, லாரியை ஓட்டி வந்தது யார்?, ஓட்டுநர் என்ன ஆனார்? என்று கீழப்பழுவூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சிலிண்டர் ஏற்றி வந்த லாரி விபத்தில் சிக்கி நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அரியலூர் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.