புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் செரியலூர் ஜெமின் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சிகிச்சையில் உள்ள கோபாலைப் பார்க்க அவரது மனைவி சாந்தாலெட்சுமி, அவரது மருமகள் சத்யா மற்றும் பேரக்குழந்தைகள் இருவர் ஆகியோர் அவரது காரில் திருச்சி சென்று கோபாலை பார்த்துவிட்டு அதே காரில் ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் சென்ற காரை செரியலூர் இனாம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னையன் மகன் தமிழ் ஓட்டியுள்ளார்.
இந்த கார் திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கீரனூர் அருகே களமாவூர் மேம்பாலத்தில் வரும் போது எதிரே திருச்சி நோக்கி கார் ஒன்று வந்துள்ள்ளது. இந்த காரை வ திருச்சி பெரியகம்மாளத் தெரு செந்தில்நாதன் மகன் ராகவ் ஓட்டிச் சென்றுள்ளார். இத்தகைய சூழலில் தான் இரு கார்களும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ராகவ் ஓட்டிச் சென்ற கார் அப்பளமாக நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் சென்ற சாந்தாலெட்சுமி, சத்யா, கார் ஓட்டுநர் தமிழ் ஆகியோரும் எதிரே வந்து மோதிய காரில் வந்த ராகவ் மற்றும் அவரது நண்பர் டால்மியாபுரம் ஜோஸ்வா உள்பட 5 பேரும் காயமடைந்தனர். மேலும் குழந்தைகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கியவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராகவ், ஜோஸ்வா இருவரும் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சாந்தாலெட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள கணவரைப் பார்த்துவிட்டு வரும் வழியில் ஏற்பட்ட விபத்தில் மனைவி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.