incident happened to medical student by some men in West Bengal
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி அருகே ஒடிசாவைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மேற்கு வங்கம் துர்காபூரின் சிவபூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருகிறார். இவர், நேற்று இரவு தனது ஆண் நண்பருடன் கல்லூரியில் வாயில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில ஆண்கள், அவர்களைத் தடுத்து நிறுத்தி அந்த பெண்ணை காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று வலுக்கட்டாயமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸுக்கு புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, தனது மகளின் நண்பருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும், அவர் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் தனது மகளின் மொபைல் போனையும் பறித்து அவரிடமிருந்து ரூ.5,000 பறித்துச் சென்றதாகவும் தெரிவித்தார். அந்த புகாரின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர் உள்ளிட்டவர்கள் மீது போலீசார் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண் உயிருக்கு போராடிய நிலையில் துர்காபூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். தேசிய மகளிர் ஆணையத்தின் குழு ஒன்று பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது பெற்றோரையும் சந்திக்க துர்காபூருக்குச் செல்கிறது. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் அர்ச்சுனா மஜும்தார் கூறுகையில், “வங்காளத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற வழக்குகளில் காவல்துறை எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதுபோன்ற குற்றங்கள் அதிகரிப்பதைத் தடுக்க முதலமைச்சர் முன்வந்து இணைந்து செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.
திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி்யில், கொல்கத்தாவில் உள்ள கல்லூரி வளாகங்களில் இரண்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு பிறகு மீண்டும் இது போன்ற சம்பவம் நிகழ்ந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கொல்கத்தாவில் உள்ள அரசு நடத்தும் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது முதுகலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், மாநிலத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது மாநிலம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு வழிவகுத்தது. அதே போல் கடந்த ஜூலை மாதம், கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் உள்ள தெற்கு கல்கத்தா சட்டக் கல்லூரி வளாகத்தில் ஒரு சட்ட மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அரசியல் தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படும் முன்னாள் மாணவர், இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு பாதுகாவலர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.