21 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பைக்குகளில் துரத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

உத்தரப் பிரதேச மாநிலம் பால்ராம்பூரைச் சேர்ந்தவர் 21 வயது மாற்றுத்திறனாளி பெண். காது கேளாத வாய் பேச முடியாத இந்த பெண் சம்பவம் நடந்த தினத்தன்று, தனது தாய் மாமாவின் வீட்டுக்குச் செல்வதாக வீட்டை விட்டு வெளியேறினார். வெகுநேரம் ஆகியும் பெண் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் அவரை தேடத் தொடங்கினர். இறுதியில் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள புதர்களில் உடைகள் கிழிந்த நிலையில் அந்த பெண் மயக்கமடைந்து கிடந்திருப்பதை குடும்பத்தினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, அவரிடம் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

அப்போது,  தான் அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறினார். அதாவது, பாதிக்கப்பட்ட பெண் தனது தாய் மாமா வீட்டிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஒரு நபர் தனது பைக்கில் பெண்ணை உட்கார வைத்து அமர்ந்த வெறிச்சோடிய இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணை 3,4 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அதில், அந்த பெண்ணை அடையாளம் தெரியாத 3 முதல் 4 ஆண்கள் பைக்குளில் துரத்துவதும், வெறிச்சோடிய சாலையில் அலறி அடித்து அந்த பெண் ஓடுவதும் தெரிந்தது.

இதனையடுத்து, பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அதன்படி, குற்றச் செயலில் ஈடுபட்ட அங்கூர் வர்மா மற்றும் ஹர்ஷித் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். மாவட்ட நீதிபதி, எஸ்பி மற்றும் நீதிபதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் குடியிருப்புகள் அமைந்துள்ள இடத்தில் இந்த சம்பவம் நடந்திருப்பது அந்த மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.