சகோதரர்கள் இருவரும் சேர்ந்து 15 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து 5 மாதங்களாக கர்ப்பமாக இருந்ததால் உயிருடன் புதைக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவரை, பனாஸ்பரா கிராமத்தைச் சேர்ந்த பாக்யதார் தாஸ் மற்றும் பஞ்சனன் தாஸ் ஆகிய சகோதரர்கள் இருவர் பலமுறை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் அந்த சிறுமி 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த விவகாரத்தை அறிந்த சகோதரர்கள் இருவரும், கருவை கலைக்குமாறு சிறுமியிடம் கூறியுள்ளனர். கருக்கலைப்புக்கு பணம் கொடுக்கவும் வசதிகளை செய்யவும் அவர்கள் முன்வந்துள்ளனர். ஆனால், சிறுமி கருவை கலைக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் நடந்த தினத்தன்று பாதிக்கப்பட்ட சிறுமியை ஒரு இடத்திற்கு அவர்கள் அழைத்துள்ளனர். அதற்கு சம்மதம் தெரிவித்து அந்த சிறுமியும் அங்கு சென்றுள்ளார். அப்போது அங்கு, ஒரு குழியைத் தோண்டி கருக்கலைப்பு செய்யாவிட்டால் உயிருடன் குழியில் புதைத்துவிடுவதாக சகோதரர்கள் மிரட்டியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமி, அங்கிருந்து தப்பித்து ஓடிவந்துள்ளார். அதன் பின்னர், தனக்கு நேர்ந்த கொடுமைகளை தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை, மருத்துவ பரிசோதனை செய்ய சிறுமியை மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை, குஜாங் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாக்யதார் தாஸ் மற்றும் பஞ்சனன் தாஸ் ஆகிய சகோதரர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.