வளர்ப்பு நாயை கல்லால் அடித்ததால் 14 வயது சிறுவனை கடத்திச் சென்று கொடூரமாகத் தாக்கி மின்சாரத்தை பாய்த்து விஷம் குடிக்க வைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

உத்தரப் பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 14 வயது சிறுவன் ஹிரித்திக் யாதவ். இவர் அருகில் உள்ள கிராமத்தில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்று தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது உள்ளூர்வாசியான விஷம்பர் திரிபாதி என்பவரது வளர்ப்பு நாய், ஹிரித்திக் யாதவை துரத்தியுள்ளது. இதில் பயந்து போன ஹிரித்திக், கீழே கிடந்த கல்லை எடுத்து நாய் மீது வீசி எறிந்து அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவந்துவிட்டார். 

Advertisment

ஒருநாள் கழித்து, விஷம்பர் திரிபாதி தன்னுடைய இளைய மகன் மற்றும் தனது இரண்டு நண்பர்கள் ஆகியோரோடு ஹிரித்திக் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர்கள், ஹிரித்திக்கை வலுக்கட்டாயமாக வீட்டில் இருந்து இழுத்துச் சென்று அவரை கொடூரமாகத் தாக்கி அவரது காலணிகளை நக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவரை மின்சாரம் மூலம் தாக்கி விஷத்தை குடிக்க வைத்துள்ளனர். 

அதன் பின்னர், வீடு திரும்பிய ஹிரித்திக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. ஆரம்பத்தில், உன்னாவ் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அதன் பின்னர் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டஹிரித்திக்கின் தாயார் ஆஷா, உள்ளூர் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தார். ஆனால், அந்த புகார் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. உள்ளூர் ரவுடியான விஷம்பர் திரிபாதி, அவருடைய செல்வாக்கு மூலம் விசாரணையை திசைதிருப்புவதாக ஆஷா குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisment

இந்த சம்பவம் அரசியலிலும் புயலை கிளப்பியுள்ளது. உள்ளூர் சமாஜ்வாதி கட்சி மாவட்ட பொறுப்பாளரான ராஜேஷ் யாதவ், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இது குறித்து கூறிய அவர், இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவிடம் பிரச்சனையை எழுப்புவேன் என்றும்,  இதனால் மக்களவையில் இது குறித்து விவாதிக்கப்படும் என்றும் கூறினார்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், இது குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.