14 வயது வங்கதேச சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி மூன்று மாத காலத்தில் சுமார் 200 ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் வசாய் நகரில் உள்ள ஒரு பிளாட்டில் பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், மீரா-பயந்தர் வசாய்-விரார் காவல்துறையின் மனித கடத்தல் தடுப்புப் பிரிவு (AHTU), எக்ஸ்டோடஸ் ரோடு இந்தியா பவுண்டேஷன் மற்றும் ஹார்மனி பவுண்டேஷன் ஆகிய தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கடந்த ஜூலை 26ஆம் தேதி அந்த பிளாட்டில் சோதனை நடத்தியது. அப்போது, வங்கதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி உள்பட 5 பேரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருப்பது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட 5 பேரில், 3 பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள். இதனையடுத்து, சிறுமி உள்பட பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண்கள் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 14 வயது சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், வங்கதேசத்தைச் சேர்ந்த அந்த சிறுமி, பள்ளி பாடம் ஒன்றில் தோல்வியடைந்ததால் வீட்டை விட்டு ஓடி வந்துள்ளார். அதன் பின்னர், ஒரு அறிமுகமான பெண் அந்த சிறுமியை சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழையச் செய்து அவரை பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். அங்கு அவரை மூன்று மாதத்தில் சுமார் 200 ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பருவமடைவதைத் தூண்டுவதற்காக சிறுமிக்கு ஹார்மோன் ஊசிகள் வழங்கப்பட்டதாக தெரியவந்தது. மேலும், பாதிக்கப்பட்டபர்கள் கைக்குழந்தைகளாக இருக்கும்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடத்தப்பட்டு பாலியல் தொழில் செய்பவர்களுடன் வாழ வைக்கப்படுகிறார்கள் என்பதும் அத்தகைய ஊசிகள் வழங்கப்பட்டு அவர்கள் பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறார்கள் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய குற்றவாளியான முகமது காலித் அப்துல் பாபாரி (33), ஜூபர் ஹருன் ஷேக் (38) மற்றும் ஷமிம் கஃபார் சர்தார் (39) ஆகிய முன்று பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தொழிலில் ஈடுபட்ட மற்றவர்களைப் பிடிக்க நாட்டின் பல்வேறு இடங்களுக்கு போலீஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.